Show all

எப்படி இருந்திருக்கும் கடலுக்குள் மூழ்கிய சோழர்கால பூம்புகார்! எண்ணிம முறையில் மறுஉருவாக்க முயற்சி.

குஜராத்தின் துவாரகா நகரத்திலும் எண்ணிம முறையில் மறுஉருவாக்க முயற்சித் திட்டம் தொடங்கப்பட்டு, துவாரகாவை வரைபடமாக்க ஏற்கனவே நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன. கடலுக்குள் மூழ்கிய சோழர்கால பூம்புகார் நகரத்தையும் எண்ணிம முறையில் மறுஉருவாக்க முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதுவும் விரைவில் முன்னெடுக்கப்பட தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்போம். தமிழக அரசைத் தூண்டுங்கள் இணைய ஆர்வலர்களே.

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சோழர் காலத்துப் பூம்புகார் நகரைப் போற்றிச் சொல்லும் சிலப்பதிகாரச் செய்யுள் அடிகள்:
பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்!
கடலை வேலியாகக் கொண்ட இந்த உலகத்தில், சோழனின் குலத்தைப்போலவே பூம்புகார் நகரமும் பழமை வாய்ந்தது, உயர்ந்தது, சிறந்து விளங்குவது, ஆகவே, பூம்புகாரைப் போற்றுவோம்!
‘மங்கல வாழ்த்து’ என்பது ஒரு பேரிலக்கியத்தை நல்ல சொற்களைச் சொல்லித் தொடங்கும் ஓர் உத்தி. அதன்படி இளங்கோவடிகள் தேர்ந்தெடுத்த நல்ல சொற்களால் நிலா, சூரியன், மழை ஆகியவற்றைப் போற்றிவிட்டுப் பூம்புகாரைப் புகழ்ந்து பாடுகிறார் சிலப்பதிகாரத்தில். அதன்பிறகுதான் தலைவன் தலைவி அறிமுகமெல்லாம்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழியில் இருந்து சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது பூம்புகார். காவிரிபூம்பட்டினம் சங்க காலச் சோழர்களின் துறைமுகப் பட்டினமாக திகழ்ந்த மண். குணக்கடல்கரையில் வரலாறு படைத்த பகுதி என்றே கூறும் அளவிற்கு இதன் போற்றுதல் பாடல்கள் கூறுகிறது. 

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இலங்கை பர்மா, சீனா, உரோம் போன்ற நாடுகளுக்குச் சென்றுவந்த தமிழர் வணிகப் பண்டமாற்றுப் பொருட்கள் பூம்புகார் சோழத்துறைமுகம் வந்தே இறங்கின என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. இந்தியர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு நாட்டு மக்களுக்கு இது வணிக நகரமாக இருந்துள்ளது என்பதை தொல்லியல் அகழாய்வுச் சான்றுகள் வாயிலாகவும், சங்க இலக்கியங்களின் வழியாகவும் நாம் நன்கு அறிய முடிகிறது. 

காவிரி ஆறு கடலில் கலக்கும் இடம் தான் பூம்புகார். அதன் காரணமாகவே காவிரிபுகும் பட்டினம் என்ற சொல் மருவி காவிரிபூம்பட்டினம் என்றானது. இந்தப் பூம்புகார் நகரம் இயற்கையின் சீற்றத்தால் நீருக்குள் மூழ்கடிக்கப்பட்டது என்ற உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் நாகரிகத்தில் சிறந்து விளங்கியது என்பதும், கடல் வாணிகத்தில் சிறப்பு பெற்றிருந்தது என்பதும் இலக்கியங்கள் உள்ளிட்ட பலவற்றாலும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 

பட்டினப்பாலை சிறப்பித்துக் கூறும் காவிரிப்பூம்பட்டினத்தின் (பூம்புகார்) ஒரு பகுதியை கடல்கோளால் கடல் கொண்டது. தற்போது எஞ்சியுள்ள பகுதி சிறிதளவுதான் என்பது, அகழ்வாய்வுகள் மற்றும் மேற்பரப்பு ஆய்வுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. கடல் கொண்ட பூம்புகாரை கண்டுபிடிக்க இரண்டு கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. ஒன்று, நிலப்பரப்பில் அகழாய்வு, இரண்டாவது, நீர்ப்பரப்பில் (கடலில்) அகழாய்வு. மேலும் ஆய்வுக்குரியவை ஆழ்கடல் ஆய்வின் மூன்று இடங்களில், கட்டடப் பகுதிகள் போன்ற அமைப்பு இருப்பதை இவ்வாய்வுகள் மூலம் தெரிய வந்தது. கட்டடப் பகுதிகளின் நீளம் 40 மீ, அகலம் 25 மீ, தடிமன் 5 மீ எனக் தெரிவிக்கப்பட்டது. கடலின் ஆழம் 24 மீட்டர் எனவும் குறிக்கப்பட்டதோடு. அடுத்து, வானகிரி கடற்கரையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில், 19 மீட்டர் ஆழத்தில் ஒரு கப்பலின் உடைந்த பகுதிகள் இருப்பது கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 

கடந்த 20,000 ஆண்டுகளில் நிலச்சரிவு, கடல் மட்ட உயர்வு, காவேரியின் இடம்பெயர்வு, வெள்ளம், சுனாமி, சூறாவளி மற்றும் அரிப்பு போன்ற புவி இயக்கவியல் செயல்முறைகளும் பூம்புகார் கடலுக்குள் புதைந்ததை குறிக்கும். கடலில் மறைந்துபோன சோழ வம்ச துறைமுகம் வரலாற்றின் காலச்சுவட்டில் சுமார் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மறைந்துபோன தமிழ்நாட்டின் சோழ வம்ச துறைமுக நகரமான பூம்புகாரை இயல்அறிவு (சயின்ஸ்) மற்றும் தொழில்நுட்பத் துறையின் தலைமையிலான கூட்டமைப்பால் எண்ணிம முறையில் புனரமைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குஜராத்தின் துவாரகா நகரத்திலும் இதேபோன்ற திட்டம் தொடங்கப்பட்டு வருவதாகவும், துவாரகாவை வரைபடமாக்க ஏற்கனவே நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன என்;றும் தெரிவிக்கிறார்கள். 

பூம்புகாரில் இதற்கான அதிக வேலைகள் நடைபெறவில்லை. இந்த இரண்டு தளங்களும் புவியியல்பாடாக இணைக்கப்படுமா என்பது தெரியாது என்றும் ஆய்வில் கண்டறியப்படும் எனவும் கூறப்படுகிறது. 

குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் தற்போது நீருக்கடியில் இருக்கும் பாரம்பரியத்தை பார்த்து ஆராய்ந்து வருவதாகவும். இந்த கட்டமைப்புகள் எவ்வாறு கட்டப்பட்டன எனவும் கட்டமைப்புகளின் புகைப்படங்கள் கிடைக்கின்றனவா மற்றும் நகரங்கள் நீரில் மூழ்குவதற்கு காரணங்கள் என்ன என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 

பூம்புகார் திட்டத்திற்காக, பண்டைய நகரத்தின் வரலாற்றைக் கண்டறிய 13 கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் வலையமைப்பை டிஎஸ்டி என்ற அரசு அமைப்பு தொடங்கியுள்ளது. இந்த நகரம் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, இப்போதுள்ள பூம்புகார் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள காவிரி கழிமுகப் பகுதியில் அமைந்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு பூம்புகாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சமூக-கலாச்சார பரிணாமம் மட்டுமல்லாமல் இயல்அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிணாமம் ஆகிய பல்வேறு தொகுப்புகளை வழங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.