Show all

லலிதா நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களில் ஒருவன் சிக்கினான்! குழந்தைகள் முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களில்

திருச்சி லலிதா நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் துப்பு துலங்கியது. திருச்சி காவல்துறையினரின் அதிரடி விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கினான்

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: லலிதா நகைக் கடையின் திருச்சி கிளையில், 30 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான வைர நகைகளை முகமூடி அணிந்து, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 

கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு படக்கருவி பதிவுகளில் துப்பு கிடைக்கிறதா, கொள்ளையர்கள் வட மாநிலத்தவரா, கடை ஊழியர்களுக்குத் தொடர்பு உண்டா என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. 

இந்த நிலையில், திருவாரூரில் வாகன சோதனையின் போது பைக்கில் வந்த கொள்ளையன் பிடிபட்டான். மற்றொருவன் தப்பி ஓடினான். 

சிக்கினவனிடம் இருந்து இரண்டு மூட்டைகளில், சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மூட்டைகளில் இருந்த நகைகள் லலிதா நகைகடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது, பார் கோடு மூலம் தெரியவந்துள்ளது. 

முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்துள்ளது. தப்பியோடியவன் சீராதோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. அவனைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருவர் தானா, அல்லது வேறு நபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

தப்பி ஓடி விட்ட சுரேசைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சுரேசின் தாயார் கனகவல்லி, மாரியப்பன், ரவி குணா உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைப் பிடித்து தற்போது தங்கள் வசம் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இன்றைக்குள் சுரேசும் பிடிபடுவான் என காவல்துறை தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,295.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.