Show all

தமிழ்நாடு அரசு 12மணிநேர வேலை சட்டமுன்வரைவை நிறைவேற்றியது! மாபெரும் கலாச்சார மாற்றத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு

அமைப்பு சாரா நிறுவனங்கள் முன்னெடுத்து வந்த 12 மணி நேர வேலை இனி அமைப்பு சார்ந்த நிறுவனங்களிலும் தொடரலாம் என்கிற வகையாக தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வரைவைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டமன்றத்தில் நேற்று பதிகை செய்தார். இது தமிழ்நாட்டை வடஇந்திய மாதிரி நாடாக மாற்றுவதற்கு திராவிட மாதிரி அரசு முன்னெடுக்கும் சட்டமாக அமையும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.

09,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: விடுதலை பெற்ற இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைத்துத் தருகிற கூடாரங்களில் வாழ்க்கை நடத்தி கூடுதல் நேர உழைப்பை நிறுவனங்களுக்குத் தருவது வட இந்தியாக் கலாசாரத் தொடர்கதையாகும். 

இந்தவகை கலாச்சாரச் சிக்கலில் தமிழ்நாடு இருக்கிறது என்றால் அது அமைப்பு சாரா தொழில்களில் மட்டுமாகும். குறிப்பாக வீடுகள், கடைகள், நிறுவனங்களின் பாதுகாவலர் பணியில் ஈடுபடுகிறவர்கள் தமிழ்நாட்டில் 12மணி நேரவேலையில் ஈடுபடுத்தப்படுகின்ற நிலை உள்ளது. 

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை சட்டமுன்வரைவு திமுக அரசால் நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வரைவைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டமன்றத்தில் நேற்று பதிகை செய்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், இந்தச் சட்டமுன்வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து மார்க்சிய கம்யூனிசக் கட்சி, விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. எனினும் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 12 மணி நேர வேலை சட்டமுன்வரைவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 

மார்க்சிய கம்யூனிசக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ளது. தொழிற்சங்க உரிமையை நசுக்கும் சட்டம் பற்றி காலையிலேயே முதல்வரை சந்தித்து பேசினோம். அதனைத் தொடர்ந்து முதல்வர் உறுதியளித்தார். ஆனால் அதன் பின்னரும் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. என்றார். 

இந்தியக் கம்யூனிசக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன், நூற்றாண்டு காலமாக போராடி பெற்ற சம்பள உயர்வு, நிரந்தர வேலை என அனைத்தையும் நீர்த்துப் போகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம் சட்டமுன்வரைவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். என்றார். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் சிந்தனைசெல்வன், 12 மணி நேர வேலை சட்டமானது ஆலை முதலாளிகளுக்கான சட்டமாக உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்து குரல் கொடுத்தோம். அவர்கள் இந்த சட்டம் திணிக்கப்படாது என்கிறார்கள். ஆனால் இது உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும். என்றார். 

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) இந்த சட்ட முன்வரைவால் தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் என்றார். 

பாஜகவைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசும், மோடி அரசினை போலவே விவாதமின்றி அவசரகதியில் தற்போது தொழிற்சாலைகள் விதிகளுக்கான வரைவுத் திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது நூற்றாண்டுகாலமாகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகளை நொடிப்பொழுதில் நீர்த்துப்போகச் செய்யும் வரலாற்றுப் பெருந்துரோகமாகும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய ஒன்றிய அளவில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் 'தொழிலாளர் சட்டத் தொகுப்பை' நாடாளுமன்றத்தில் அவசரகதியில் நிறைவேற்றிய மோடி அரசு, தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் தாமதித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, கடந்த மாதம் மாநில அளவில் மோடியின் 'தொழிலாளர் சட்டத்தொகுப்பின்' கூறுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதனை அப்படியே அடியொற்றி, அதே போன்றதொரு சட்டத்திருத்தத்தை திமுக அரசும் நிறைவேற்றி, மோடி அரசு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பினை தமிழ்நாட்டில் செயல்படுத்த திமுக அரசு முயல்வதிலிருந்தே, திமுகவின் திராவிட மாதிரி என்பது பாஜகவின் தமிழ்நாட்டு மாதிரிதான் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆகவே, பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 'தொழிற்சாலை சட்டத்திருத்த வரைவினை' திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று நாம் தமிழர் கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம், கல்வியின் மீது ஈடுபாடு இல்லாத வடஇந்தியக் கலாச்சாரத்திற்குத் தமிழ்நாட்டை இட்டுச் செல்லும் நோக்கத்திற்கானது என்பதை அடித்துக்கூறலாம். 

காலையில் நிறுவனத்திற்குச் செல்லும் முன்னதாகப், பிள்ளைகளை வேகவேகமாக துள்ளுந்தில் பள்ளிக்குக் கொண்டுவிடும் பெற்றோர்களை இனி தமிழ்நாட்டுத் தெருக்களில் காண்பது அரிதாகிவிடும். 

பெற்றோர் பிள்ளைகளுக்கிடையான உறவுக்கு இந்தச் சட்டம் பெருந்தடையாக அமையும். மாபெரும் கலாச்சார மாற்றத்தை எதிர்நோக்கி, தமிழ்நாடு இந்தச் சட்டத்தால் தள்ளப்படும் என்பது உறுதியான உறுதி. இதனைத் தமிழ்நாட்டின் எதிர்கட்சிகள் புரிந்துகொண்டு செயல்பட்டால் இந்தச் சட்டத்தையே திமுக தனது ஆட்சிக்கு எழுதிக்கொண்ட முடிவுரையாக முடித்து வைக்க முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,591.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.