Show all

தங்கபாலுவின் கருத்துக்கு எழுபது விழுக்காட்டு பேர்கள் கோபம்! இராஜீவ் படுகொலையில், சீமானுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்

சீமானை எதிர்த்து திடீரென்று களத்தில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ். இந்த நிலையில், இராஜீவ் படுகொலையில், சீமானுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று வெளியிட்ட தங்கபாலுவின் கருத்துக்கு, எழுபது விழுக்காட்டு பேர்கள் கோபம்! என ஓர் இயங்கலை இதழின் கருத்துக் கணிப்பில் வாக்களித்திருக்கிறார்கள்.

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று சீமான் பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதால், அவரும் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார். எனவே, அவருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான கே.வி.தங்கபாலு.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டுவந்த சீமான், தனது பேச்சின்போது, அமைதிப்படை எனும் அநியாயப் படையை இலங்கைக்கு அனுப்பி, எம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜீவ் காந்தி என்கிற என் இனத்தின் எதிரியை, தமிழர் தாய் நிலத்திலேயே கொன்று புதைத்தோம் என உணர்ச்சிகரமாகப் பேசினார் என்பதானது கே.வி தங்கபாலுவின் குற்றச்சாட்டு. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த சீமான், ‘நான் கடந்த 25 ஆண்டுகளாக இதைத்தான் பேசிவருகிறேன். இதற்காகப் பலமுறை சிறை சென்றும் திரும்பியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியினர்தான் இப்போது வேறு வேலையில்லாமல், இதை எடுத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, வழக்கை சட்டப்படி சந்திப்பேன். மற்றபடி, நான் பேசிய பேச்சை திரும்பப் பெறப்போவதில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, சீமானின் பேச்சுகுறித்து, கே.வி.தங்கபாலு கருத்து தெரிவித்த போது: சீமானின் பேச்சு, சமுதாயத்தில் மேலும் வன்முறையைத் தூண்டுகிற விதமாகவும் தேச விரோதச் செயல்கள் செய்வோரை ஆதரிக்கும் விதமாகவும் இருக்கிறது.

முன்னாள் தலைமைஅமைச்சர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது மிகக் கொடூரமான, மன்னிக்க முடியாத குற்றம் என்று உச்ச அறங்கூற்றுமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட சிலரும் தண்டனை பெற்றுவருகிறார்கள்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலைச் சதியில் சம்பந்தப்பட்ட ஒருவர், இதுநாள் வரையிலும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்து வந்திருக்கிறார் என்பது சீமானின் பேச்சிலிருந்து தெரியவருகிறது. அதாவது, ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள்தான் என்று அவரே தன் சாட்சியாக ஒப்புக்கொள்கிறார் என்கிறபோது, இந்தக் குற்றத்தில் அவருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

அதாவது, அறங்கூற்றுமன்றம், காவல்துறையை ஏமாற்றி, அவர் இதுநாள் வரையில் நடமாடிக்கொண்டிருக்கிறார். எனவே, இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள நியாயத்தின் அடிப்படையில், சீமான் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப்பெற்றதோ, அதேவிதமான தண்டனைகள் சீமானுக்கும் கிடைக்க வேண்டும். சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது காவல் துறையின் கடமை. சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்.

சீமான் இப்போதுதான் அரசியலுக்குள் வந்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் வரலாறு என்பது நீண்ட நெடிய தியாக வரலாறு. அதுவும் தமிழர்களுக்காக ராஜீவ் காந்தி செய்திருக்கும் தியாகம் என்பது சீமானுக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

விடுதலைப்புலிகளின் கொடுமைகளிலிருந்து தமிழர்களை மீட்டெடுக்கத்தான் இந்திய அமைதிப் படையே இலங்கை சென்றது. இலங்கையில் இன்றைக்கும் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள் என்றால், அதற்கு ராஜீவ் காந்தியும் இந்திரா காந்தியும் எடுத்துவந்த மகத்தான செயல்பாடுகள்தான் காரணம்! என்றார் தங்கபாலு. 

தங்க பாலுவின் இந்தக் கருத்து குறித்து மக்கள் என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதாக ஓர் இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பை முன்னெடுத்திருக்கிறது. அதில் எழுபது விழுக்காடு மக்கள் தங்கபாலுவின் கருத்தின் மீது கோபப்படுவதாக வாக்களித்திருக்கிறார்கள். 

தம்பி தங்கபாலு! அயோக்கியா படத்தில் உண்மையான குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு சட்டத்தில் வழியே இல்லாத நிலையில் அவர்களுக்கு தண்டனைப்  பெற்றுத் தரவேண்டும் என்பதற்காக, கதைத்தலைவனான விசால், நாங்கள் தான் குற்றவாளிகள் என்று தன்னையும் குற்றத்தில் பிணைத்துக் கொண்டு அவர்கள் அனைவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்பார். நாங்கள்தாம் குற்றவாளி என்று தெரிவித்த சீமான் விசாரணை என்று வரும் போது நாங்களும் என்று சொன்னதில் தங்கபாலு, தங்கபாலு வகையறா என்று உங்களையும் மாட்டி விட்டுவிடப் போகிறார் கவனமாக இருங்கள். உண்மை எதுவாக இருந்த போதும், இராஜிவ் மரணத்தில் ஆதாயம் அடைந்தது காங்கிரஸ் என்பது கடவுளுக்குத் தெரியுமே. இடைத் தேர்தலுக்கெல்லாம் மரண அனுதாபத்தை இழுக்க வேண்டுமா என்ன? என்கின்றனர் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,306.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.