Show all

அரசுப் பள்ளிகளுக்கு உதவும் அதிசயமனிதர்! வசதி இல்லாததால், கடை கடையாகச் சென்று நன்கொடை திரட்டி

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கிராமப்புற பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி கொடுத்து தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அசத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கிணற்றை சேர்ந்த பாண்டிசாமி அகவை 68. இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 'கல்விக்கு உதவுங்கள்' என அட்டையில் எழுதி கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு கடை கடையாக சென்று குறைந்த பட்சம் ஒரு ரூபாய் கூட நன்கொடையாகப் பெற்று பணத்தை சேமித்து, கிராமப்புற பள்ளிகளுக்கு இருக்கை, பெஞ்ச், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் என வாங்கி கொடுத்து வருகிறார்.

முதியவர் பாண்டிசாமி கூறுகையில், 'எனக்கு மனைவி இல்லை. அவர் இறந்தவுடன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மும்பை சென்று விட்டேன். மும்பை செம்பூர் தடா நகர் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  சேவை செய்து வந்தேன். அங்குள்ள கோயில் நிர்வாகிகள் எனது 2 மகள்கள், ஒரு மகனுக்கு திருமணம் முடித்து வைத்தனர். எனக்கு துணையாக யாரும் இல்லை என்பதால் கடந்த 20 ஆண்டுகளாக நன்கொடை திரட்டி கிராமப்புற பள்ளிகளுக்கு உபகரணங்கள், ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள் வாங்கி தருகிறேன். கஜா புயலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கந்தர்வக்கோட்டை பகுதியில் பத்து பள்ளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் வழங்கினேன்.

இதுவரை நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு சிலேடு புராஜெக்டர் வாங்கி கொடுத்துள்ளேன். பள்ளி ஆசிரியர்கள் நேரடியாக இந்தப்  பொருட்களை என்னிடம் வாங்குவதில்லை. அந்த ஊர் பிரபல பிரமுகர்கள் சிபாரிசு கடிதம் கொடுத்தால்தான் பள்ளியில் வாங்கி கொள்கின்றனர்.  

நான் விரும்பி இதனை ஒரு சேவையாக செய்வதால் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் நான் உணவகங்களில் சாப்பிட்டால் காசு வாங்க மறுக்கின்றனர். இரவு தங்க ஊர் மக்கள் உதவி செய்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கு உதவி செய்துவிட்டு தற்போது சிவகங்கை மாவட்டம் வந்துள்ளேன். என்னிடம் தற்போது ரூ.6 ஆயிரம் மட்டுமே உள்ளது. ரூ.25 ஆயிரம் சேர்ந்தவுடன் தேவையுள்ள பள்ளிக்கு தேவையானவற்றை வாங்கி கொடுக்க உள்ளேன்' என்றார்.    

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,056.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.