Show all

ஹிந்தி-காங்கிரஸ் வளர்த்தெடுப்பு, ஹிந்துத்துவா-பாஜகவின் அடையாளம், இந்தியா-தமிழர் நிலம்

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னமேயே, ஆங்கிலத்தின் இடத்தில் ஹிந்தியை நிறுவுவதற்கான முயற்சியை காங்கிரஸ் முன்னெடுத்து விட்டது. 

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது ஹிந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் காங்கிரஸ் கட்சியின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், அற வழிகளில் நடத்தப்பட்டப் போராட்டமாகும்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னமேயே முதல் முறையாக ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. 

அப்போது ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட, சென்னை மாநில அரசு தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்ற காங்கிரசுக் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் ஹிந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும் பெரியார் ஈ.வெ.இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். மாநில காங்கிரஸ்; அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். 

காங்கிரசுகட்சி அரசு இரண்டு ஆண்டுகளில் பதவி இழந்ததை ஒட்டி சென்னை மாநில அரசு பிரித்தானிய ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' ஆளுகைக்கு வந்த நிலையில், அடுத்த ஆண்டில் இந்தக் கட்டாய ஹிந்திக் கல்வியை விலக்கினார்.

பிரித்தானியாவிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு காங்கிரஸ் அரசால், ஹிந்தி அலுவல் மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல்மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் ஹிந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் தான்தோன்றித்தனமாக காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது. 

சனவரி 26, 1950 அன்று நடப்பிற்கு கொண்டு வந்த காங்கிரஸ் அரசின் இந்திய அரசியலமைப்பில், 1965 ஆண்டிலிருந்து ஹிந்தி மட்டுமே அரசு அலுவல் மொழியாக விளங்க காங்கிரஸ் அரசு முயற்சிகள் மேற்கொள்ளத் தொடங்கி விட்டது. 

ஹிந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பலைகளை உண்டாக்கின. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த எதிர்ப்பில் முன்னணியில் இருந்தது. 

தமிழகத்தின் கடும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக அப்போதைய இந்திய தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு அலுவல் மொழி சட்டத்தில், ஹிந்தி பேசாத மாநில மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை ஹிந்தி திணிக்கப் படாது என்று ஒரு தற்காலிக தீர்வில் முடித்துக் கொண்டார். 

ஆனாலும் ஹிந்தித் திணிப்பை விடாமல் காங்கிரஸ் முன்னெடுத்து வந்தது. தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வலுக்கத் தொடங்கியது. 1965 குடியரசு நாளை கருப்புதினமாகக் கொண்டாட திமுக அழைப்பு விடுத்திருந்தது. போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பெரிதும் ஈடுபட்டனர். மதுரையில் 25 சனவரியன்று அவர்களுக்கும் காங்கிரசு கட்சியினர் சிலருக்கும் இடையே எழுந்த கைகலப்பு பெரும் கலவரமாக வெடித்தது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிய இக்கலவரம் காவலர்களால் அடக்க முடியாத அளவில் அடுத்த இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. 

தடியடி, துப்பாக்கிச்சூடு என மாநிலக் காவல் துறையினர் களமாடினர். இக்கலவரங்களில் 70 பேர்கள் (அதிகாரப்பூர்வமாக) இறந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, ஹிந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற தற்காலிக தீர்வை அவரும் நேருவைப் போலவே முன்வைத்தார். ஏதோ நிரந்தரத் தீர்வு கிடைத்;ததைப் போல போராட்டம் முடிவுக்கு வந்தது.

பிரித்தானிய ஆட்சியின்போது ஆங்கிலம் மட்டுமே அரசுமொழியாக விளங்கி வந்தது. இந்திய விடுதலை பெற்ற பிறகு காங்கிரசாரால் ஹிந்தியும் அலுவல் மொழியாக்கப் பட்டு, ஹிந்தி பேசும் மக்களுக்கு மட்டும் ஆங்கிலத்திடம் இருந்து விடுதலை அளித்த காங்கிரஸ் அரசு, 

தமிழகம் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மீதும் ஹிந்தியை பாடமொழியாகவும், அலுவல் மொழியாகவும் திணிக்க, தமிழகம் தவிர்த்;த இந்தியாவின் அனைத்து மாநிலத்தவர்களும், ஆங்கிலேயர்களின் ஆங்கிலத்தில் இருந்து விடுதலை பெறாத நிலையில் ஹிந்தி மொழிக்கும் அடிமையானார்கள். 

ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான நாவலந்தேயம் எனும் இந்தியாவில், ஐநூறு ஆண்டுகாலத்திய ஆங்கிலேயரின் ஆங்கிலத் திணிப்பை விடக் கொடுமையானது, காங்கிரசாரின் ஐம்பது ஆண்டுகால ஹிந்தித் திணிப்பு. அதனினும் மேலாக ஐந்தே ஆண்டுகளில் ஹிந்துத்துவா திணிப்பில் சாதனை படைத்தது பாஜக.

தமிழகத்தில் நோட்டாவிற்கு பிந்தைய நிலையிலேயே பாஜக இருந்தாலும், ஹிந்துத்துவா திணிப்பிற்காக எச். ராஜா போன்றவர்களை வைத்து தமிழகத்தை அசிங்கப் படுத்தியது மிக அதிகம்.

ஒட்டு மொத்த இந்தியாவில் பாஜகவின் அராத்துக்கள் மிக மிக அதிகம். நான்கரை ஆண்டுகளாக இந்திய மக்கள் அனுபவித்து வரும் நள்ளிரவில் பணமதிப்பிழப்பு, நள்ளிரவில் சரக்கு-சேவைவரி, பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் கொலைகள் என அனுபவித்து வரும் கொடுமைகளே சாட்சி.

நாவலந்தேயம் தமிழர் மண்! நாவலந்தேயமே இந்தியாவாகத் திரிந்தது. 

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. 

குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர்.

அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம்.

உலகம்- 

தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம்.

உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம்.

இந்தியா குறித்து 'நாவலந்தேயம்' என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது.

அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - India என்று பதிவு செய்தனர்.

அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே.

வடவர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்) பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங், பாரதிய ஜனதா கட்சி, பாரதிய ராஷ்ட்ரிய காங்கிரஸ் (இந்திய தேசிய காங்கிரஸ் என்று தமிழில் தான் நாம் அப்படி எழுதுகிறோம்) என்பனவற்றை ஒப்பு நோக்குங்கள்.

அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு வாசுகோடகாமா இந்தியாவைத் தேடி வந்தடையும் போது-

ஆரியர் அராபியர் மகமதியர் எல்லாம் நுழைந்து கலந்து விட்டதால்,

அவர்கள் வணிகத் தொடர்புக்காகத் தேடிவந்த நாவலIndiaயம் இல்லை. நாகரிகத் தமிழர் இல்லை.

பிந்தைய வரலாறு நாம் அறிந்ததுதானே.

நாவலந்தேயத்தை-

ஆங்கிலத்தில் India என்கிறோம்

வடஇந்தியர்கள் பாரத் என்றே எழுதுகின்றார்கள்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,057.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.