Show all

சத்தம் காட்டாமல், 'மக்கள் சந்திப்பு புரட்சி பயணம்' என்று மக்களைச் சந்தித்து வரும் தினகரன்! ஆளாளுக்கு கூட்டணி குறித்து பேசிவரும் நிலையில்

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஈரோடு மாவட்டத்தில் நடத்தி வருகிறார். அதன்படி அவர் நேற்று இரவு அந்தியூருக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:

அந்தியூர் அருகே உள்ள மணியாச்சி ஓடைநீரை வரட்டுப்பள்ளம் அணை உள்பட 7 ஏரிகளுக்கு கொண்டுவரவேண்டும். பர்கூர் மலைப்பகுதியின் மேற்கு பகுதியில் உள்ள மலைக்கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும். மேட்டூர் வலதுகரை வாய்க்கால் உபரிநீரை அந்தியூர் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு வரவேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் என்னிடம் தெரிவித்து உள்ளனர். அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்தியூர் பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் குடிநீர் பிரச்சினை உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் தண்ணீரை அரசு வீண் செய்கிறது. இதனால் தான் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. மழைநீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொண்டால் நாம் கர்நாடக மாநிலத்தில் தண்ணீருக்கு கை ஏந்த வேண்டிய நிலை இருக்காது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழவர்கள் தங்களுடைய குறைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தினர். அவர்களை அழைத்து பேசாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் மிரட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் அவற்றை அரசு கண்டு கொள்வதில்லை. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். எனவே எப்போது பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் தமிழ்நாட்டில் அ.ம.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு தினகரன் பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,064.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.