Show all

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த தடகள வீரர், சிறுமை சேர்ப்பவராக அடையாளம் காணப்படுவாரா

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாரியப்பன் தங்கவேலு தனது நண்பருடன் புதிதாக வாங்கப்பட்ட காரில் கடந்த 20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (03.06.2017) அன்று சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் ஓமலூரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரின் பைக் மாரியப்பனின் கார் மீது மோதியது. காரில் லேசாக கீறல் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது மாரியப்பனுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறிது நாள்களுக்கு பிறகு தொடர்வண்டி தண்டவாளம் அருகே சதீஷ்குமார் இறந்து கிடந்தார்.

கார் சேதமானதற்கு மாரியப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிறகே தனது மகன் இறந்துள்ளதால் மாரியப்பன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தாய் முனியம்மாள் காவல் துறையில் புகார் தெரிவித்தார். எனினும் மாரியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் சதீஷ்குமார் மர்ம மரண வழக்கில் மாரியப்பனின் பெயர் சேர்க்க கோரி சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர்கள் மரண வழக்கில் மாரியப்பனின் பெயரை சேர்க்குமாறு காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் இந்த வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தனர். மாரியப்பன் தங்கவேலுவை, வழக்கின் எதிர் மனுதாரராக சேர்த்த உயர்அறங்கூற்று மன்றம் 25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (11.11.2017) க்குள் மாரியப்பன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். தந்தை தொடக்கத்தில் குடும்பத்தை கைவிட்டார். தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்தார். தாயார் செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும் மரக்கறி விற்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை வளர்த்தெடுத்தார்.

தனது ஐந்தாவது அகவையில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் பேருந்து வலது காலில் ஏறி முழங்காலுக்குக் கீழே காலை இழந்தார். இந்தப் பின்னடைவிலும், அவர் உயர்நிலைப் பள்ளியை நிறைவு செய்தார்.

தனது காலை இழந்தநிலையிலும் மாரியப்பனுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் இருந்தது. இவரது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் பரிந்துரைப்படி இவர் உயரம் தாண்டுவதில் பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது 14ஆவது அகவையில் நற்தேகம் உடையவர்களும் கலந்துகொண்ட போட்டியில் இரண்டாவதாக வந்தார். தேசிய மாற்றுத்திறனாளர் போட்டிகளில் கலந்து கொண்ட மாரியப்பனை கண்ட பயிற்றுநர் சத்தியநாராயணா தமது பயிற்சிக்கு ஏற்றுக் கொண்டார். பெங்களூருவில் அவரது பயிற்சி மையத்தில் இணைந்தார்.

மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5117 (03.2016) தூனிசியாவில் நடந்த ஐபிசி கிராண் பிரீ போட்டியில் 1.78 மீ தாண்டி இரியோ மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார். தங்கம் வென்ற இவருக்கு இந்தியாவில் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தங்கப் பதக்கம் வென்றதால் இவருக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க இருக்கிறது. அத்துடன் தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது. தனக்கு அறிவிக்கப்படும் பரிசுத்தொகைகளிலிருந்து தான் படித்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இவர், சிறுமை சேர்ப்பவராக அடையாளம் காணப்படுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.