Show all

வடஇந்தியப் பகுதிகளில் எளிதாகப் பின்வாங்குகிறதா பாஜக நடுவண் அரசு!

வடஇந்தியப் பகுதிகளில் ஏதாவது ஒரு திட்டம் கொண்டு வரும்போது மக்கள் எதிர்ப்பு இருந்தால், அந்தத் திட்டத்தை எளிதாக விலக்கிக் கொள்கிறது நடுவண் அரசு. ஆனால் தமிழகத்தில் கொண்டுவரும் திட்டங்களை எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் விலக்கிக் கொள்ளாத நிலை இருக்கிறது. இதற்கான காரணம்: தமிழகத்து பாஜகவினர் மாநில உரிமைக்கு மதிப்பளிக்காமல், சுய சிந்தனை இல்லாமல், பாஜக மேல்மட்டத்திற்கு கொத்தடிமைகளாக வேலை செய்வதுதான் என்கின்றனர் பொதுவான அறிஞர் பெருமக்கள். 

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து தனது வர்த்தகத்தை ஆசியாவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்ட சவுதி ஆரம்கோ நிறுவனம் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து இந்திய உற்பத்தி தளத்தை அமைக்க முடிவு செய்தது. இதற்காக நடுவண் அரசுடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்நிலையில், இத்திட்டத்தை முதலில் தென் மும்பையிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ரத்தனகிரி பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டது. எனவே இத்திட்டத்திற்காக நிலத்தைக் கையகப்படும் முயற்சியில் நடுவண் அரசு இறங்கியபோது அப்பகுதி மக்களும், உழவர்களும் நிலத்தைக் கொடுக்க முடியாது எனப் போராட்டம் நடத்தினர். 

இத்திட்டம் ரத்தனகிரி பகுதிக்கு வந்தால் இப்பகுதியில் விளையும் அல்போன்ஸா மாம்பழம், முந்திரி விளைச்சல், மீன் பிடி தொழில் ஆகியவை அதிகளவில் பாதிக்கும் என உணர்ந்த மக்கள் நடுவண் அரசையும், இத்திட்டத்தையும் எதிர்த்துக் கடுமையான போராட்டம் நடத்தினர். 

மக்கள் எதிர்பின் காரணமாகத் தற்போது இத்திட்டம் ராய்காட் மாவட்டத்தின் ரோஹா பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இது தென் மும்பையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

ரத்தினகிரி பகுதியில் அமைக்கப்படுவதாக ஒப்பந்த செய்யப்பட்ட நிலையில் இத்திட்டத்தின் மதிப்பு 44 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது. தற்போது இடம் மாற்றம் மற்றும் இதர காரணிகளை மையப்படுத்தி இத்திட்டத்தின் மதிப்பு 36 விழுக்காடு வரையில் உயர்ந்து 60 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வை சவுதி ஆரம்கோ நிறுவனத்திடம் தெரிவித்தபோது எவ்விதமான மறுப்பும் தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டது. இதன் மூலம் இத்திட்டம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் ஆரம்கோ கூட்டணி இந்தியாவில் இருக்கும் 1.3 பில்லியன் மக்களுடன் நேரடியாக வர்த்தகம் செய்ய முடியும். இத்திட்டத்தின் 50 விழுக்காடு பங்குகள் ஆரம்கோ - அபுதாபி தேசிய நிறுவன கூட்டணியும், மீதமுள்ள 50 விழுக்காடு பங்குகளை அரச எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வைத்துக்கொள்ள உள்ளன.

இங்குதான் ஒரு கேள்வி எழுகிறது. தமிழகத்தில் நடுவண் அரசு தொடங்கும் எந்தத் திட்டமானாலும் (மீத்தேன், நியூட்ரினோ) எதிர்ப்பைத் தாண்டியும் அதே இடத்தில் செயல் படுத்த முனையும் நடுவண் அரசு, வட மாநிலங்களில் இழப்புகளையும் ஈடு செய்து கொண்டு எளிதாக இடம் மாற்றத்தை முன்னெடுக்கிறதே ஏன்? என்பதுதான் அந்தக் கேள்வி. 

இதற்கு விடையாக: தமிழகத்து பாஜகவினர் மாநில உரிமைக்கு மதிப்பளிக்காமல், சுய சிந்தனை இல்லாமல், பாஜக மேல்மட்டத்திற்கு கொத்தடிமைகளாக வேலை செய்வதுதான் காரணம் என்கின்றனர் பொதுவான அறிஞர் பெருமக்கள். இதனால் தமிழகம் பாஜக அரசால் எந்தப் பயனும் அடைய முடிவதில்லை. மேலும் கூட இதனால் தமிழகத்தில் பாஜகவும் வளர முடிவதில்லை என்கின்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,239.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.