Show all

வியப்பில் ஆழ்த்தும் கம்போடிய அரசு! இராசேந்திர சோழனுக்கு சிலை; அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்ப் பாடம்

வியப்பில் ஆழ்த்தும் கம்போடிய அரசு! கம்போடியா நாட்டு தலைமைஅமைச்சர், கூன்சென் முன்னிலையில், தமிழ் மன்னன் இராசேந்திர சோழனுக்கு கம்போடியாவில் எதிர் வரும் 07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122 (20.05.2020) சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்றுக் காரணங்கள் முன்னெடுக்கிறது.

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கம்புதேசத்து (கம்போடியா) பேரரசன் முதலாம் சூர்யவர்மன், தாம்பரலிங்கா நாட்டின் மீது போர்த்தொடுக்க நினைத்தார். அப்போது, தாம்பரலிங்கா (மலேசியா) அரசனுக்கு உதவியாக கடாரத்து மன்னன் (மியான்மர்) சங்கரம விஜயதுங்கவர்மன் வந்தான். அந்த சூழலில்தான், தன் நண்பனும், சோழப் பேரரசருமான இராசேந்திர சோழனை உதவிக்கு அழைத்தார் முதலாம் சூர்யவர்மன். நண்பனின், கோரிக்கையை ஏற்று, ஏறத்தாழ ஆயிரம் கப்பல்களில், ஒருலட்சம் போர்வீரர்களை கடாரத்தின் மீது ஏவி போர் நடத்தினார் இராசேந்திரன். ஒரே நாளில் ஏழு துறைமுகத்தை அடித்துக் காலிசெய்து, போரில், கடாரத்தையும், அதன் கடைசி மன்னனான சங்கரமன் விஜயேந்திரனையும் அடிமைப்படுத்தினார்.

இந்த வரலாற்றை நினைவு கூறும் விதமாக இராசேந்திர சோழனுக்கு கம்போடியாவில் எதிர் வரும் 07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122 (20.05.2020) சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. சிலை திறப்புவிழாவில் கம்போடியா நாட்டு தலைமைஅமைச்சர், கூன்சென் கலந்துகொள்கிறார். 

கம்போடியாவின் சியாம் ரீப் நகரில் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சி கம்போடியாவின் பெரும்பான்மையான தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த இளவரசிக்கு வியப்பும் ஆர்வமும் ஒருசேர ஏற்பட்டது. அடிப்படையில் நாட்டியம் அறிந்த இளவரசி, கம்போடியாவின் பாரம்பரிய நடனமான அப்சராவும், இந்த நடனமும் ஒன்றுபோல இருப்பதாக உணர்ந்தார்.

கலை என்பது ஒரு சமூகத்தின் கலாசார பண்பாட்டின் வெளிப்பாடு. எனவே, இந்த நடனம் குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்பி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கம்போடிய அமைச்சரைத் தொடர்பு கொண்டு, இது என்ன நடனம்? இதை ஆடும் மக்கள் யார்? என்பதான கேள்விகளை முன்வைத்தார். மேலும், இதுகுறித்து அறிந்து தகவல்கள் தருமாறு தன் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்டனர்.

அது ஒரு பரதநாட்டிய நிகழ்வு. அதை பன்னாட்டு தமிழர் நடுவமும் அங்கோர்வாட் தமிழ்ச்சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அதிகாரிகள் அவர்களிடம் நடனம் குறித்தும், நடனத்தின் தாயகமான தமிழகத்தின் பண்பாடு குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், தகவல்கள் அறிய அவர்கள் தமிழகத்துக்கு வந்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தங்களின் தொப்புள்கொடி உறவு உள்ள நிலம் என்பதை அறிந்து வியந்தனர். பயணம் முடிந்து கிளம்புவதற்கு முன்பாக, கம்போடியாவில் இராசேந்திர சோழனுக்கு சிலை நிறுவுவோம் என உறுதி அளித்து செல்கிறார்கள். அன்று இளவரசியின் ஆழமனத்தில் உருவான அந்தத் தேடல், கம்போடியாவில் இராசேந்திர சோழனுக்கு சிலை எழுப்புமளவுக்கு வந்து நிற்கிறது.

பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் கடந்த ஆண்டு கம்போடியாவில் உலகத் தமிழர் மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். 
அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு சர்வதேச நாட்டியாஞ்சலி விழாவை நடத்தினார்கள் அதைத் தொலைக்காட்சியில் கண்ட இளவரசி, கலாசாரத்துறை அதிகாரிகளை அனுப்பி பரதநாட்டியம் குறித்த விவரங்களை அறிந்து வரச் சொல்லியிருந்தார். அவர்களிடம் பேசத் தொடங்கிய பின்னர்தான், அவர்களின் வரலாறும் நம்முடைய வரலாறும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பதைத் தெரிந்துகொண்டோம் என்கிறார் பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம்.

பிறகு, அதை முறையாகப் பதிவு செய்ய முடிவெடுத்து, தமிழகத்துக்கு வந்து பார்வையிடுமாறு, அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் தொல்லியல் துறையைச் சேர்ந்த இரு ஆய்வாளர்கள் தமிழகத்துக்கு வந்தனர். அவர்களுடன் அங்கோர்வாட் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞானசேகரனும் உடன்வந்தார். அவர்களை காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாசநாதர் கோயில், வைகுண்டப்பெருமாள் கோயில் ஆகிய இடங்களுக்கு முதலில் அழைத்துச் சென்றோம்.

கோயிலின் விளிம்புகளில் மன்னனின் முகத்தைப் பதிப்பது பல்லவர்களின் வழக்கம். அப்படி வைகுண்ட பெருமாள் கோயிலில், மன்னன் ஒருவனின் முகமும், ஒரு சிறுவனின் முகமும் பொறிக்கப்பட்டிருந்த சிற்பங்களைக் கண்ட கம்போடிய அதிகாரிகள், எங்கள் நாட்டு மன்னன் உட்காருவதும், இந்த சிற்பங்களில் மன்னர் உட்காந்திருப்பதும் ஒரே மாதிரியாக இருக்கிறது என ஆச்சர்யபட்டுக் கொண்டனர். ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ தேசத்து மன்னருக்கு வாரிசு இல்லாத காரணத்தால், கம்போடியாவிலிருந்து 13 அகவை சிறுவனான இரண்டாம் நந்திவர்மனை அழைத்துவந்து முடிசூட்டியிருக்கிறார்கள். அதுகுறித்த சிற்பம்தான் அது என்பது தெரிந்த பின்னர் மிகுந்த ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

அன்றிரவு உணவு நேரத்தின்போது, உங்கள் நாட்டை ஆண்ட மகேந்திவர்மனும், பல்லவ நாட்டை ஆட்சி செய்த மன்னனும் வேறு வேறு நபர்கள் அல்ல. ஒரே ஆள்தான். உங்கள் நாட்டு மன்னன்தான் அங்கேயும் ஆட்சி செய்திருக்கிறான். கீழக்கரையில் கம்பூசியம், மேலக்கரையில் காஞ்சிபுரம் நாம் எல்லாம் ஒரே நாட்டின் குடிமக்கள் என்று சொன்னேன். உடனே இருவரும் எஸ், சேம் பிளட் வி ஆர் தமிழ்ஸ் என கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

அடுத்ததாக தஞ்சைப் பெரிய கோயிலுக்கு அழைத்துச் சென்றோம். இராசராசனின் சிலைக்கு அருகேயிருந்த கருவூராரின் சிலையைப் பார்த்தவர்கள், இதே உருவத்தில் ஒரு சிலை அவர்கள் நாட்டின் கருவூலத்தில் உள்ளது எனத் தெரிவித்தனர். பெரிய கோயிலின் கும்பம்நிறுவும் விழாவிற்கு உங்கள் நாட்டு மன்னர் வந்திருக்கலாம், அப்போது அவருக்கு நினைவுப் பரிசாக அந்தச் சிலை கொடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சொன்னோம். ஆனால், அதுகுறித்த வரலாறுகளைச் சேகரித்து நமது மாமன்னன் இராசேந்திர சோழன் அவர்கள் மன்னருக்கு உதவிய வரலாற்றுத் தகவல்களைச் சொன்னார்கள். 

அதோடு கம்புதேசத்துக்கு தலைவலியாக இருந்த கடாரம் முற்றோடு அழிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை சீனப்பயணி ஒருவன் படமாக வரைந்திருக்கிறான். போரில் வெற்றி பெற உதவி செய்ததற்காக, நினைவுப் பரிசாக தங்கத்தேர் பரிசாக வழங்குகிறான். அந்த தங்கத்தேர் டெல்லியில் ஒரு கருவூலத்தில் இருக்கிறது. சோழர்களுக்கும், கம்போடியர்களுக்கும் மிக நீண்ட உறவு இருந்திருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் அந்தச் சிலை என்ற தகவலையும் சொன்னார்கள். இராசேந்திர சோழனுக்கு சிலை திறக்க ஆவலாக இருப்பதற்கு அந்த வரலாறுதான் காரணம்.

கம்போடியாவில் இருக்கின்ற பள்ளிகளில் இனி தமிழை ஒரு பாடமாக நடத்தப்போவதாகவும் தமிழ் மொழிக்கும், கேமர் மொழிக்கும் அகரமுதலி தயாரிக்கவும் பள்ளிகளில் திருக்குறளைப் பாடமாக வைக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,238.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.