Show all

யார் இந்த அனிதா! பேருந்தை விட்டு இறங்கியதும் அழகுநிலையம் சென்று ஒப்பனை செய்து கொள்வார், மீண்டும் பேருந்தில் தொடர்வார்

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேருந்தை விட்டு இறங்கியதும் அழகுநிலையம் சென்று ஒப்பனை செய்து கொள்வார், மீண்டும் பேருந்தில் தொடர்வார். விதம்விதமான முடிதிருத்தம் ; அசரடிக்கும் ஒப்பனை. பெயர் அனிதா. பேருந்தில் இவருக்கு வேலை என்ன தெரியுமா! 

காரமடையைச் சேர்ந்த பெண்மணி அனிதாதேவி. 33 அகவையுடைய இவர் கணவர் சிவக்குமாருடன் வசித்து வருகிறார். இவரது வேலையே, பேருந்து நெரிசலை பயன்படுத்தி திருடுவதுதானாம். ஒரு பொருளோ, பணமோ திருட்டு போய்விட்டால் பறிகொடுத்தவர் பக்கத்திலேயே இருக்கும் அனிதா மேல் சந்தேகமே வராது. அந்த மாதிரி நாசூக்காக நடந்து கொண்டிருக்கிறார். இதனால் யாராலுமே அனிதாவை பிடிக்கவே முடியவில்லை. பேருந்தில் நடக்கும் திருட்டை மட்டும் கண்டுபிடிக்கவே முடியாமல் யோசித்த காவல்துறையினர் இதற்காக ஒரு தனிப்படையும் அமைத்தார்கள். 

பலநாள் திருடிதான் ஒருநாள் அகப்படுவாள் அல்லவா? அந்த மாதிரி அனிதாவும் சிக்கி கொண்டார். உக்கடத்தில் இருந்து வடகோவைக்கு பேருந்து ஒன்று சென்றிருக்கிறது. கூட்டம் நிறைந்திருந்தது என்பதால் அனிதா வழக்கம்போல் ஏறிக் கொண்டார். பேருந்தில் ஒரு பெண் பயணியிடம் 10 ஆயிரம் ரூபாயை லாவகமாக களவாடிவிட்டார். அப்போதுதான் அனிதா கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். கைதான அனிதாவிடம் விசாரணை நடத்தியபோதுதான் இவரது களவாடும் திறமையே முழுசாக தெரிய வந்தது. பெண்களிடம் நகை, பணம், செல்பேசி இவைகளை 5 ஆண்டுகளாகவே திருடி வந்திருக்கிறார்.

இதுவரை திருடிய பணத்தைக் கொண்டு ஒரு மளிகை கடையும் நடத்தியும் வந்துள்ளார். இந்த அழகில், அனிதா சுய உதவி குழு தலைவியாகவும் இருந்திருக்கிறார். இந்தப் பொறுப்பை வைத்துக் கொண்டு, வங்கிகளுக்கு சென்று லட்சக்கணக்கில் கடனையும் வாங்கி, அந்தப் பணத்தில் சொகுசோ சொகுசென்று வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனால் வங்கியில் வாங்கிய பணம் எங்கே என்று கேட்டு தொல்லை பண்ணவும்தான் 10 ஆயிரம் ரூபாயை திருட முயன்றதாக அனிதா காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். தொடர் விசாரணை போய் கொண்டிருக்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,950.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.