Show all

குடுமிப்பிடி சண்டை வீதிக்கு வந்ததால்! முதல் முறையாக நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்திலேயே சோதனை

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள்! இலஞ்சம் கொடுத்தேன் விட்டு விட்டார்கள்! என்று பாடினார் ஒரு கவிஞர். அந்த வகையான நிருவாகம் தான் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையிலேயே இலஞ்சமா? இரண்டு மேல் அதிகாரிகளையும் நீக்கி விட்டதா நடுவண் அரசு? என்றெல்லாம் வாயைப் பிளக்க வேண்டிய தேவை எதுவுமேயில்லை. 

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பாகவே, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே, அதிகார வர்க்கம் என்ற சாதி அதிகாரத் துறையை தொடர்ந்து தங்கள் குடும்பங்களுக்குள்ளாகவே தக்க வைத்து வருகிறது. இப்போது அவர்களுக்குள்ளாக ஒரு சிறிய குடுமிப்பிடி சண்டை. அவ்வளவுதான். 

லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக ராகேஷ் அஸ்தானாவால் புகார் செய்யப்பட்ட நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் அலோக் வர்மா விடுப்பில் அனுப்பப்பட்டார்.  துணை இயக்குநராக செயல்பட்டு வந்த நாகேஷ்வர ராவ் இயக்குநர் பொறுப்புகளை கூடுதலாக கவனிப்பார் என நடுவண் அரசு அறிவித்திருக்கிறது.

இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கு ஒன்றில் ஐதராபாத்தைச் சேர்ந்த சனா பாபு என்ற தொழில் அதிபரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றார் என நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கினை எதிர்த்து டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு ஒன்றினை பதிகை செய்திருந்தார் ராகேஷ் அஸ்தானா.

மேலும் தன்னுடைய மூத்த அதிகாரி அலோக் வர்மா மீது லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவித்தார் ராகேஷ் அஸ்தானா. இதனைத் தொடர்ந்து, அலோக் வர்மாவினை அவருடைய பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது நடுவண் அரசு. அவருடைய பொறுப்புகள் அனைத்தையும் துணை இயக்குநர் நாகேஷ்வர ராவ் பார்ப்பார் எனவும் தகவல் அளித்திருக்கிறது நடுவண் அரசு.

அலோக் வர்மா மீது புகார் அளித்த ராகேஷ் அஸ்தானாவின் அனைத்து பொறுப்புகளையும் நேற்றே திருப்பிப் பெற்றுக் கொண்டது நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை என்பதும் குறிப்பிடத்தக்கது. குடுமிப்பிடி சண்டை வீதிக்கு வந்ததால், முதல் முறையாக நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை கட்டிடத்தின் 10வது மற்றும் 11வது மாடியில் இருக்கும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் ராகேஷ் மற்றும் அலோக் இருவரின் அலுவலக அறைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,950.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.