Show all

என்ன நாடு? என்ன சட்டம்? யாரிடம் முறையிடுவது! நீட்குளறுபடி 15ஆயிரம் தமிழக மாணவர்கள் பரிதவிப்பு

22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் இத்தேர்வை 1.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மாற்று மொழி, நீண்ட தூரம் பயணத்தால் 15 ஆயிரம் தமிழக மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். 

உலக வரலாற்றில் மாணவ, மாணவிகள் இவ்வளவு கேவலமாக எங்கும் நடத்தப் பட்ட வரலாறு இல்லை. என்ன நாடு? என்ன சட்டம்? அசிங்கம், அசிங்கம்! மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் யாரிடம் சென்று முறையிடுவது? பலருக்கு இந்த ஆண்டு மருத்துவக் கனவு பகல் கனவாக்கப் படப் போகிறது. 

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை நாடு முழுவதும்  கட்டாயமாக்கினால் போதுமா? மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கான தயாரிப்புகளை முன்னெடுக்க முடியாது என்றால் எதற்காக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்க வேண்டும். 

கடந்த ஆண்டு நீட் தேர்வு கிடையாது; உண்டு என்று முன்னுக்கு பின் முரணாக தொடர்ந்து தகவல்;கள் வந்து கொண்டிருந்ததால், பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. 

ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும் என்பதால், விருப்பம் உள்ள அனைவருமே விண்ணப்பம் செய்தனர். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 476 மருத்துவக்கல்லூரிகளில், 60,990 இடங்கள் உள்ளன.  தமிழகத்துக்கு சொந்தமானது 2900 இடங்கள். நாடு முழுவதுமாக 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 2,255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 170 தேர்வு மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. 1,07,288 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் சுமார் 15 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கப்பட்டன. கேரளாவில் மட்டும் 5371 பேர் எழுதுகின்றனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று முன்தினமே தொடர் வண்டியில் புறப்பட்டனர். ஒரு சிலர் விமானங்களில் ரூ.18 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து இன்று புறப்பட்டு சென்றனர். 

 

தொடர்வண்டியில் பயணம் செய்தவர்கள் முன்பதிவு செய்ய முடியாததால் வேறு வழியின்றி முன்பதிவு செய்யாத பெட்டியிலேயே பயணம் செய்தனர். இதனால், கடும் சிரமங்களை சந்தித்தனர். இதே போல், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, பெங்களூருவில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் நேற்று மாலையில் இருந்து பேருந்து, தொடர்வண்டி மூலம் செல்ல தொடங்கினர். தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுடன் பெற்றோரும் பயணம் செய்தனர்.  

மொழி தெரியாத மாநிலங்கள் என்பதால் வெளி மாநிலங்களுக்கு சென்ற பெரும்பாலானோர் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்தனர். 

நீட் தேர்வு வேண்டாம் என்று போராடியவர்களை, வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியதற்காக போராட மடை மாற்றம் செய்துள்ளது நடுவண் பாஜக அரசு. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல்ராஜன் உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயன் என்ன?

இந்நிலையில், நீட் தேர்வுக்காக வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள், நடுவண் அரசின்  இந்த அடவடி நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளனர். 

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி துர்கா தேவி கூறியதாவது: என்னுடைய தந்தை கூலி வேலை செய்து தான் என்னை படிக்க வைத்தார். மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு சிறு அகவையில்;;;;;;;;;;;;; இருந்தே பள்ளி படிப்பை படித்து வந்தேன். நீட் தேர்வு விண்ணப்பிக்கும் போது, தமிழகத்திற்குள் தேர்வு மையங்கள் ஒதுக்கும் படியே குறிப்பிட்டிருந்தேன். ஆனால், எர்ணாகுளத்தில் எனக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. வட்டிக்கு பணம் வாங்கி தான் தேர்வு எழுத செல்ல வேண்டும். இதனால், கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தேர்வு வெற்றிகரமாக எழுத முடியுமா என்பது கவலையாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

அரியலூர் மாணவி ஹேமா கூறியதாவது:

நீட் தேர்வை எழுதுவதற்காகத் தாயின் கம்மலை அடகு வைத்து விட்டு எர்ணாகுளம் செல்கிறேன். பேருந்து நிலையத்திற்கே தனியாக செல்லாத நான் எப்படி வெளிமாநிலத்திற்குச் சென்று தேர்வை எழுதப் போகிறேன் என்று தெரியவில்லை எனப் புலம்பித் தள்ளினார் தேர்வுக்கு வருகிறவர்கள் வெளிர் நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது. பெரிய பட்டன் போட்ட சட்டை அணியக் கூடாது. வாட்ச், மோதிரம், கம்மல், வளையல், செயின், சூ அணியக் கூடாது. கையில் ஒரு போட்டோ மட்டுமே கொண்டு வரவேண்டும். மேலும் ஹால் டிக்கெட் எடுத்து வர வேண்டும். பேனா, பென்சில், சாவி எடுத்து வரக்கூடாது. காலை 7.30 முதல் 8.30 மணி வரை ஒரு பிரிவாகவும், 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு பிரிவாகவும் தேர்வு மையத்துக்கு வரவேண்டும். அவர்களை உடல் ரீதியிலும், கருவிகள் மூலமாகவும் சோதனை நடத்துவோம். இதற்கு பெற்றோர் சம்மதிக்கிறோம் என்று கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெளிமாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும், அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப்படியாக 2ம் வகுப்பு ரயில் கட்டணமும்.(பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு 2ம் வகுப்பு கட்டணத்திற்கு மிகாமலும்). இதர செலவினங்களுக்காக மாணவர் ஒருவருக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், முதல்வர் உத்தரவில் தனியார் பள்ளி மாணவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே உதவி தொகை தர முடியும் என்று மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்துவிட்டனர். ஏற்கனவே, வெளி மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் செய்வதறியாது தவிக்கும் மாணவர்கள், பெற்றோருக்கு அதிகாரிகளின் இந்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,778.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.