Show all

திட்டமிட்டபடி சிறைக்குச் சென்றார் சந்தோஷ்! அலைகழிக்கப்பட்டதென்னவோ பாவம் காவல்துறையினர்.

சிறைக்குச் சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்ற திட்டத்தில்- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை, காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஞாயிற்றுக் கிழமை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், ஈரோடு தொடர் வண்டிநிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தன்னை ஜம்மு காஷ்மீரில் இருந்து அனுப்பி வைத்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார். 

உடனடியாக ஈரோடு காவல் துறையினர் துரிதப்படுத்தப்பட்டனர். தொடர் வண்டி நிலையம், மற்றும் பேருந்து நிலையம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வந்தன. ஆனால் சோதனையில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை.  

வெடிகுண்டு மிரட்டல் செய்தி பொய்யானது என்று புரிந்துகொண்ட காவல் துறையினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணையை மேற்கொண்டனர். அவர் பயன்படுத்திய செல்பேசி மூலம் விசாரணை மேற்கொண்டதில் அந்த கைபேசி உரிமையாளர் லிங்கராஜ் என அறிந்து நெருங்கிய நிலையில், அவரோ போதையில் தனது செல்பேசியை தொலைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆக கீழே கிடந்த செல்பேசியை பயன்படுத்தியே மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதை காவல் துறையினர் உறுதி செய்தனர். 

பின்னர் செல்பேசி அழைப்புக்கான கோபுரத்தை கண்டறிந்த காவல் துறையினர் ஈரோடு தொடர் வண்டிநிலையம் அருகே நின்றுகொண்டிருந்த சந்தோஷ் (41) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தோசின் வாக்குமூலத்தைக் கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். 

சந்தோஷ் தனது வாக்குமூலத்தில், ‘எனக்கு திருமணமாகி 2 மனைவிகள் இருந்தனர். தற்போது இருவரும் என்னுடன் இல்லை. பிரிந்து சென்றுவிட்டனர். நான் தனியாக உள்ளேன். சிறுமுகை அருகே நெசவாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். அதிக வேலைபளு. வேலைக்குச் செல்லவில்லை; ஆனால் சாப்பாடு வேண்டும்.

அதனால் ஏதாவது செய்து சிறைக்குச் சென்றால் சாப்பாடு கிடைக்கும் என முடிவு செய்தேன். அதனால் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என தெரிவித்தார். பின்னர் சந்தோசை அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர் காவல் துறையினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,327.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.