Show all

விஜயகாந்த் எதுவும் பேச மாட்டார்! கருத்துப் பரப்புதல் செய்ய மாட்டார். அவர் உடல்நிலை குறித்து முதன்முறையாக கட்சியினர் வெளியிடும் தகவல்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆன விஜய்காந்த் அவர்களுக்கு தற்போது 66 அகவை ஆகிறது. துணைவி: பிரேமலதா பிள்ளைகள்: விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர்.

விஜயகாந்த் என்னும் விஜயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுஅகவையிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். திரைத்துறையின் மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விஜயகாந்த் தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்துவந்தார்.

திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 41 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளர்ந்தார். இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து மிகப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம்தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது.

26 ஆண்டுகளுக்கு முன்னம் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.

14 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

எட்டாண்டுகள் முன்பு முதல் மூன்று ஆண்டுகள் முன்பு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளில் அவரின் உடல் நிலை பாதித்தது. உடல் நிலை பாதிப்போடு அவரை மேடைகளில் பார்க்க முடிந்தாலும், அவருக்கு என்ன வகையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கட்சியிலிருந்தோ, குடும்பத்திலிருந்தோ அதிகாரப் பூர்வமாக  யாரும் தெரிவித்ததில்லை. 

அருமையான மனிதர், அற்புதமான நடிகர், உன்னதமான தலைவர் விஜய் காந்த் அவர்கள் என்ற நிலையில், இங்கிதம் கருதி ஊடகங்கள் சார்பிலோ, கட்சிகள் சார்பிலோ, திரைத்துறை சார்பிலோ யாரும் அவர் உடல் நிலை குறித்து எந்தக் கேள்வியும் வைத்ததில்லை. தற்போது அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளது தேமுதிக. இந்த நிலையில்தான்:

எதுவும் பேச மாட்டார்; விஜயகாந்த் கருத்துப் பரப்புதல்  செய்ய மாட்டார் என்பதாக முதன் முதலாக விஜய்காந்த் அவர்கள் உடல்நிலை குறித்த அறிவிப்பாக தேமுதிக சுதீஷ் பகீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்  தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு இடங்களை பெற்று உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த நான்கு வேட்பாளர்களை தேமுதிக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பேட்டி அளித்துள்ளார். 

நாங்கள் கேட்கும் தொகுதி எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. பாஜகவிடம் நாங்கள் சில கோரிக்கைகள் வைத்து இருக்கிறோம். பாஜக ஆட்சி அமைத்த பின் நாங்கள் அமைச்சரவையில் இடம்பெறுவோம். சில முதன்மை கோரிக்கைகளுடன்தான் இந்தக் கூட்டணியை உருவாக்கி உள்ளோம். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் விஜயகாந்தை சந்தித்தனர். இரண்டு கட்சி தொண்டர்கள் நடுவே இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு கட்சியின் அடிமட்ட தொண்டர்களும் இதனால் தேர்தலில் இணைந்து பணியாற்ற முடியும். இது எங்களுக்கு பலம் அளிக்கும். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்துப் பரப்புதல் கூட்டங்களுக்கு வருவார். சுற்றுப்பயணங்கள் சிலவற்றில் கலந்து கொள்வார். ஆனால் தேர்தல் கருத்துப்பரப்புதலின் போது அவர் பேச மாட்டார். தேமுதிகவின் மற்ற தலைவர்கள் மட்டுமே பேசுவார்கள் என்று சுதீஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.