Show all

விஜய் சேதுபதி காவல்துறைக்குப் பாராட்டு! செல்பேசி, பைக் திருட்டுப் பொருளா என அறிய செல்பேசி செயலி அறிமுகம்

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் எண்ணிமஒத்துழைப்பு என்ற செல்பேசி செயலியை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். செல்பேசி செயலியை தொடங்கி வைத்த பின் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:

கண்காணிப்பு படக்கருவி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் ஆதரவோடு கண்காணிப்பு படக்கருவி அமைக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, சாலமன் பாப்பையா, கோபிநாத், மருத்துவர் சாந்தா, ஐசரி கணேஷ், கமலா செல்வராஜ், ஜோஸ்னா செல்லப்பா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழிப்புணர்வு திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.

இந்த எண்ணிமஒத்துழைப்பு செயலி மூலம் செல்பேசி, பைக் திருட்டை தவிர்க்க முடியும். பழைய செல்பேசி, பைக் வாங்கும்போது அது திருட்டுப் பொருளா என்பதை கண்டுபிடிக்க இந்தச் செயலி உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

விஜய் சேதுபதி பேசும் போது, மக்களின் முதன்மைப் பிரச்சனையைக் காவல்துறையினர் கையில் எடுத்திருப்பது சிறப்பானது. என்று செல்பேசி செயலி வெளியீட்டைப் பாராட்டிய அதே சமயம், காவல் நிலையங்களில் குப்பையாக இருந்த வாகனங்கள் அகற்றப்பட்டது குறித்தும் பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டார். 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,055.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.