Show all

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில்! இன்று சல்லிக்கட்டு கடற்கரை, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வண்ண மயமாகியுள்ளது

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சல்லிக்கட்டு கடற்கரை, காமராசர் சாலை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்காகத் தூய்மைப்படுத்தப்பட்டு, ஒப்பனை மயமாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்துள்ள கார்ப்பரேட் முதலாளிகளை மகிழ்விக்க, சல்லிக்கட்டு கடற்கரையில் ராட்சத பலூன்களும், பிரமிட் வடிவங்களும் எழுப்பப்பட்டுள்ளன. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்நாளின் விடியல் இப்படியான வரவேற்புகளுக்கு இடம் தரவில்லை. உலக முதலீட்டாளர்கள் உலா வரும் சல்லிக்கட்டு கடற்கரையின் காமராஜர் சாலையை, அந்நாளில் ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப் பார்த்தது. 

தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்; காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு தொடங்கியது தமிழக இளைஞர்களின் போராட்டம். தமிழ்நாட்டின் முதன்மை நகரங்களான சென்னை, கோவை, மதுரை முதலானவற்றில் மக்கள் கூடும் இடங்களில் போராட்டங்கள் நடத்தப்; பட்டன.

பணமதிப்பு நீக்கம், காவிரிப் பிரச்னை, கூடங்குளம், மீத்தேன் திட்டம், கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ முதலான பிரச்னைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டிருந்த தமிழ்ச் சமூகம், சல்லிக்கட்டுத் தடையைக் தமிழர்ப்பண்பாட்டின் மீதான தாக்குதலாகப் பார்த்தது. 

ஆறு நாட்கள் நடந்த சல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்த நாள் இன்று. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டில், சல்லிக்கட்டை வெற்றிகரமாக நடத்தி உலக சாதனையில் இடம்;;; பெறவும் செய்து விட்டோம். 

ஆனால் சல்லிக்கட்டுப் போராட்டத்தின் கடைசி நாளில், அரசின் காவல்துறை மூலமான வன்முறைக்கு, சென்னையில் மட்டும் சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டனர். எதிரி நாட்டின் மீது படையெடுத்தது போல, காவல்துறை செயல்பட்டது. அந்த ஒரு நாளில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய, சல்லிக்கட்டுப் போராட்டத்தின் பின்னணியை விளக்கி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் இயக்கிய ஆவணப்படம் இன்றைய நாளில் அதிகமானவர்களால் பார்க்கப் பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. 

அந்த ஆவணப்படம்  https://www.youtube.com/watch?v=EWggMIqpLk4&t=127s வலையொளியில் (Youtube) பதிவிடப் பட்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,041.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.