Show all

இன்றைக்கு அதிகம் தலைப்பாகி வரும் செய்திகள் 1.பாலியல் வன்முறை 2.செல்பேசி திருட்டு.

08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்றைக்கு அதிகம் தலைப்பாகி வரும் செய்திகள் 1.பாலியல் வன்முறை 2.செல்பேசி திருட்டு. 

திருமணமும், குடும்பமும் மட்டுமே பாலியல் வன்முறைக்கான தீர்வு என்று தமிழர்களால் முதன் முதலாக முன்னெடுக்கப் பட்டு உலகம் ஏற்றுக் கொண்ட நிலையில், 'திருமணம்' தமிழர் உலகிற்கு அளித்த கொடையானது. ஆனால் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த குடும்பம் என்கிற தலைப்பு தமிழகத்திலேய கேள்விக் குறியாகி வருகிறது. 

அரசே நடத்துகிற சாராயக் கடைகளாலும், கல்வி வணிகப் பொருள் ஆனதாலும், தொழிலுக்கான அடிப்படைகள் மறுக்கப் படுவதாலும், குறைந்த கூலிவேலைக்கு அல்லாடும் தமிழர்களுக்கு குடும்பம் கேள்விக் குறியாகிப் போனது. தம் மக்களை சான்றோனாக முன்னெடுப்பது பெரும் சுமையாக இருக்கிறது.

தமிழர்கள் தனிமனிதர்களாக திரிகிற போக்கு அதிகரிக்க அதிகரிக்க தனிமனித உணர்ச்சிகள் தலைதூக்கி நிற்கின்றன. குடும்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்த வேண்டிய தனிமனித உதிரிகள் செல்பேசிகளால் சுகித்துக் கொண்டிருக்கின்றனர். பொறுப்பில்லாமல் பெண்மையை பொருளாகப் பார்க்கின்றனர். சிறுமிகள் கூட பாலியல் பார்வைக்கு பலிகடா ஆக்கப் படுகின்றனர். 

சிக்கியவன் குற்றவாளி. சிக்காதவன் நிரபராதி என்கிற சட்டமாக இருக்கிறது சமூகத்தின் சட்டம். குடும்பம் அமைத்துக் கொள்ள வாய்ப்புள்ளவர்கள், பொத்தி பொத்தி குடும்பத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய சிக்கல் இருக்கிறது. எதுசரி எதுதவறு என்று தெளிவு படுத்துவதற்கு சமூகத்திற்கு தகுதியில்லை. சிறையில் இருப்பவன் எல்லாம் குற்றவாளியாகவும் இல்லை. வெளியில் இருப்பவன் எல்லாம் நல்லவனாகவும் இல்லை.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல் 

மண்புக்கு மாய்வது மண் 

என்றார் திருவள்ளுவர்.

கல்வி, தொழில், பணம், கோயில், கலைகள், ஆட்சி என்று ஒவ்வொன்றாக மண்ணின் மக்களிடம் இருந்து பிடுங்கப் பட்ட நிலையில், பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாக மண்ணின் மக்கள் போற்றி பாதுகாத்து வந்த குடும்பம் நட்டாற்றில் நிற்கிற கதியில்

சிறுமியர் வன்முறை, செல்;பேசி திருட்டு இரண்டிலிருந்தும் மீள- குடும்பத்தைக் காக்கும் சமூக அமைப்பை உருவாக்காமல், மற்றெல்லா முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீரே. 

கரூரை அருகே உள்ளது அல்லிக்கவுண்டனூர் என்ற கிராமம். இங்கு வசிப்பவர் பழனிசாமி. பாலசுப்பிரமணி என்ற 15 அகவை மகனும், ஒரு மகளும் உள்ளனர். பாலசுப்ரமணியத்துக்கு சிறு அகவை முதலே படிப்பே ஏறவில்லையாம். எவ்வளவோ சொல்லியும் பள்ளிக்கூடத்துக்கு போவதே கிடையாதாம். அதனால் எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டாராம்.

வெறுமனே ஊர் சுற்றி வருவதுதான் இவரது வேலையாம். நண்பர்களுடன் வெட்டியாக ஊரைச் சுற்ற பணம் தேவைப்பட்டுள்ளதாம். அதனால் அடிக்கடி திருட்டு வேலைகளில் இறங்கி உள்ளாராம். ஊருக்குள் யாரும் இல்லாத வீடுகள், ஏமாந்த ஆட்கள் என யாரிடமாவது எதையாவது ஆட்டைய போடுவதுதான் பாலசுப்பிரமணியம் வேலையாம்.

இவரது திருட்டை கையும் களவுமாக பார்த்து சிலர் பெற்றோரிடம் வந்து குறையாகவும், புகாராகவும் சொல்லிவிட்டு போனார்களாம். ஆனால் பெற்றோர் எவ்வளவோ கண்டித்தும் பாலசுப்பிரமணியம் திருந்தவும் இல்லை, திருட்டை விடவும் இல்லையாம். இதனால் சிலர் இவர் மீது கோபத்திலும் பொருட்கள், பணம் இழந்த ஆத்திரத்திலும் இருந்துள்ளனராம்.

இந்நிலையில் நேற்று அதே ஊரை சேர்ந்த முனியாண்டி என்பவரது வீட்டில் செல்பேசி உள்ளிட்ட சில பொருட்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனால் எல்லோருமே இது பாலசுப்பிரமணியன் வேலையாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இப்படியே விட்டால் இது சரிபட்டு வராது என்று எண்ணி இதற்கு ஒரு முடிவு கட்டலாம் என பேசிக் கொண்டனர். பின்னர் சிலர் அங்கிருந்த உருட்டுக்கட்டைகளை எடுத்து கொண்டு பாலசுப்பிரமணியம் வீட்டுக்கு சென்று அவனை வெளியே தரதரவென இழுத்து வந்தார்கள். என்ன ஏதென்று புரியாமல் தாயும், சகோதரியும் பின்னாலேயே ஓடிவந்தனர்.

பாலசுப்பிரமணியத்தை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து கையிலிருந்த உருட்டுக் கட்டையால் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். வலி பொறுக்க முடியாத சிறுவன், நான் திருடல... நான் திருடல.. என்று அலறினான். இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியம் மயக்கமானான். இதனால் பதறி துடித்த, அவரது அம்மா தண்ணீர்கொடுக்க வந்தார். ஆனால் அந்த கும்பல் தண்ணீரைகூட குடிக்க விடவில்லை. கடைசியில் பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளியமணை காவலர்கள் 5 பேரை விசாரணைக்கு கூட்டிக் கொண்டு போய் இருக்கிறார்கள். உண்மையிலேயே செல்பேசி திருட்டை பாலசுப்பிரமணியம் செய்யவில்லை என்று இப்போது கூறப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,920.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.