Show all

ஊடகங்கள் ஆத்மார்த்தமாக வெளிச்சம் காட்டும் இரண்டு தலைகள்! ஒன்று சீமான்; இரண்டு தினகரன்

நிர்பந்தத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம், தமிழிசை, பொன்.இராதாகிருஷ்னன், ஸ்டாலின், இரஜினிகாந்த், ஆகியோருக்கு பிரபலமான இதழ்கள் கூடுதலாக வெளிச்சம் காட்டினாலும், இரண்டு தலைகளுக்கு கொஞ்சமாக காட்டும் வெளிச்சத்தை பீச்சி அடிக்கும் அழகே தனி.
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஊடகங்கள் ஆத்மார்த்தமாக வெளிச்சம் காட்டும் இரண்டு தலைகள்! ஒன்று சீமான் ; இரண்டு தினகரன். பிரபலமான இதழ்கள் இந்த இரண்டு தலைகளுக்கு கொஞ்சமாக காட்டும் வெளிச்சத்தை பீச்சி அடிக்கும் அழகே தனி.
'செலவழித்த பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்! தேர்தல் ஆணையத்தின் மீது பாயும் சீமான்' என்ற தலைப்பில் 
சீமான் மீது கொஞ்சமாக காட்டிய வெளிச்சத்தை பீச்சியடித்த அழகு ஒன்றாவது.
'தினகரன் மாஸ்டர் பிளான்.. சும்மா காய் நகர்த்தவில்லை.. வெட்டியாகவும் கட்சி ஆரம்பிக்கவில்லை!' என்ற தலைப்பில் தினகரன் மீது கொஞ்சமாக காட்டிய வெளிச்சத்தை பீச்சியடித்த அழகு இரண்டாவது.
சீமான் செய்திகளை அழகாக பதிவு செய்த ஓன்றாவது அழகு:  மக்கள் மனநிலையில் மாறுதல் வருவதற்கான அடிப்படையாகப் பார்க்கிறேன். தேர்தல் களத்தில் இளைஞர்களும் புதிய புதிய முகங்களும் ஏராளமாகத் தென்பட்டதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், அண்ணா மனம் நொந்துவிடாதீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என என்னைப் பார்த்து இளைஞர்கள் கத்தும்போது மனம் நெகிழ்ந்தது. அப்பா சொல்லி மகன் ஓட்டு போட்டால் அது திமுக. மகன் சொல்லி அப்பா ஓட்டு போட்டால் அது நாம் தமிழர் கட்சி. வேண்டுமானால் பாருங்கள், இந்தத் தேர்தல் மூலம் பல மாறுதல்கள் உருவாகும்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை: நடவடிக்கையே இல்லை. அதைப் பற்றிப் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஆணையமே ஒரு நகைச்சுவைதான். எந்தவித ஒழுங்கும் இல்லை. வாக்குப்பதிவு எந்திரம் இயங்கவில்லை. அதைச் சரிபார்க்கும்போதே அது கோளாறாக இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிந்திருக்க வேண்டும். வாக்கு செலுத்தப் போகும் மக்களுக்குச் சரியான பேருந்து வசதிகளையும் செய்து தரவில்லை. பறக்கும் படை என்ற ஒன்றை அமைத்து தெருவில் போவோர் வருவோரையெல்லாம் சோதனை செய்தனர். ஆனால், பணம் கொடுக்கப்படுவதை இவர்களால் தடுக்க முடியவில்லை. வெளிப்படையாக காணொளிக் காட்சிகள் வெளியே வந்தன. அதன்பேரில் நடவடிக்கை எடுத்திருக்கலாம். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பணம் கொடுத்தார் என்பதற்காக வேலூர் தொகுதி தேர்தலையே நிறுத்திவிட்டார்கள். ஏற்கெனவே, இராகிநகர் தொகுதியில் பணம் கொடுத்த புகாரின்பேரில் தேர்தலை ரத்து செய்தார்கள். மீண்டும் இராகிநகரில் அதே வேட்பாளர்தான் நின்று வெற்றி பெற்றார். 
வேலூரில் பணம் கொடுத்த வேட்பாளரைத்தான் தண்டித்திருக்க வேண்டும். வேலூரில் மட்டும்தான் பணம் கொடுக்கப்பட்டதா? வேறு எங்குமே பணம் கொடுக்கப்படவில்லையா. தேர்தலை நிறுத்தினால் எங்களைப் போன்றவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். தேர்தல் கட்டுத் தொகைக்கே நாங்கள் சிரமப்பட்டோம். ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்துக்கு முறையாகச் செலவுக் கணக்கைக் காட்டி வருகிறோம். ஒரு வேட்பாளர் 70 லட்ச ரூபாய் வரையில் செலவு செய்யலாம் என்கிறார்கள். அந்தளவு தொகையை செலவு செய்ய எங்களால் முடியாது. 4,5 லட்ச ரூபாய் வரையில் செலவு செய்ய முடிகிறது. வேலூர் தொகுதியில் நாங்கள் செலவழித்த தொகையை ஆணையம் திருப்பித் தந்துவிடுமா. இதற்கு யார் பொறுப்பேற்பது? 
கபடி விளையாட்டில்கூட தவறு செய்பவரை மட்டும்தான் வெளியே அனுப்புகிறார்கள். மொத்த அணிக்கும் தண்டனை கொடுக்கப்படுவதில்லை. இதில், வேதனையான விசயம் என்னவென்றால், வாக்குப்பதிவு எந்திரத்தில் எங்கள் சின்னத்தைச் சிறியதாகப் போட்டு மறைத்துவிட்டார்கள். அது மங்கலாகத் தெரிந்தது. அந்தச் சின்னமே வெளியில் தெரியவில்லை. இதைக் களைவதற்காக நீதிமன்றம் போனேன். நேரம் இல்லை எனக் கூறி எங்களைக் கைவிட்டுவிட்டார்கள்.
அண்ணாவைப் போல 100 பேர் திமுகவில் உதயமானார்கள். மாட்டுவண்டியிலும் மிதிவண்டியிலும் நடந்து சென்றும் கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டார்கள். அதை அப்படியே இவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். இந்தக் கட்சியிலிருந்து பிரிந்த நடிகர் ஒருவர், இன்னொரு கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சி ஜெயலலிதா கையில் வந்து சேர்ந்தது. இந்தக் கட்சிகள் இனிமேல் தொடங்குவதற்கு என்ன இருக்கிறது. ஆள் மாறி மாறி இருப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது. இங்குக் கொள்கை தொடக்கம்தான் இருக்க வேண்டும். ஆனால், கொள்ளைத் தொடக்கம்தான் இருக்கிறது. என்றைக்கு இவர்கள் கூட்டத்துக்குப் பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டி வந்தார்களோ, வாக்குக்குப் பணம் கொடுத்தார்களோ அன்றைக்கே இவர்கள் இறந்துவிட்டார்கள். இவர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை. 
எந்தவித சுவரொட்டியும் விளம்பரமும் இல்லாமல் கூட்டங்களை நடத்தினோம். என்னுடைய குரல் காற்றில் கலந்து கரைந்தபோது, அதைக் கேட்டுத் திரண்ட மக்கள் ஏராளம். எங்கிருந்துதான் அவர்கள் வந்தார்களோ என ஆச்சர்யப்பட வைத்தது. அவர்கள்தான் என்னுடைய கனவு. அவர்கள்தான் என்னுடைய நம்பிக்கை. 
மக்கள் நடுவே வெறுப்பு இருக்கிறது. என்னுடைய பேச்சை ஒரு அரை மணிநேரம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பினால் புரட்சி வந்துவிடும். ஆனால், அதற்கு இவர்கள் தயாராக இல்லை. இவர்கள் பணம் கொடுத்து கூட்டத்துக்கு ஆட்களைக் கூட்டி வந்தால்கூட, பிரமாண்ட கூட்டம் எனச் செய்தி போடுகிறார்கள். வாக்குக்குப் பணம் கொடுப்பதையும் காட்ட மறுக்கின்றனர். எந்த ஊடகமும் பணம் கொடுத்ததைப் பற்றி விமர்சிக்கவில்லை. 
நல்ல அரசியலை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை, ஊடகங்களுக்கும் இருக்கிறது. இதையும் மீறி சமூக வலைதளங்களை இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகப் பெரிய மாறுதலைக் கொண்டு வரும். 
கொள்கைகளே இல்லாமல் கூட்டணி சேர்வது, எந்த வாயால் விமர்சித்தோமோ அவர்களையே புகழ்வது ஆகிய நிகழ்வுகளை மக்கள் ரசிக்கவில்லை.' 
 தினகரனை பாராட்டி திறனாய்வு செய்த இரண்டாவது அழகு: 'இப்போதைக்கு இருக்கும் அரசியல்வாதிகளிலேயே பக்காவாக பிளான் செய்து காய் நகர்த்தி முதிர்ச்சி தன்மையை காட்டி வருவது யார் என்றால் தினகரன் என்றே சொல்லலாம்! ஆர்ப்பாட்டம் இல்லாமல், படபடவென உளறி கொட்டும் தன்மையோ, உணர்ச்சிவசப்பட்டு தரம் தாழ்ந்து பேசுவதோ, சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி மாட்டி கொள்வதோ.. இது எதுவுமே இல்லை! எதையும் பொறுமையாக அணுகும் முறையும், அதை வெளிப்படுத்தும் விதமும் அவரது அரசியல் பக்குவம், நாகரீகத்தை வெளிப்படுத்தி வருகிறது. இப்போது, அமமுக என்ற அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து, அதன் பொதுச்செயலாளராகவும் மாறி உள்ளார் தினகரன்! தினகரன் இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம்? தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை தேர்தல் முடிந்த பிறகு அதுவும் மறுநாளே இதை செய்ய என்ன காரணம்?
முதலாவதாக, அமமுகவுக்கு ஒரு மானப்பிரச்சனை! சொந்தமாக ஒரு கட்சி என்ற அங்கீகாரம் கூட இல்லாத காரணத்தினால் சின்னம் பிரச்சனை சின்னா பின்னமாக்கி விட்டது. உச்சஅறங்கூற்றுமன்றம் வரை போய் வந்தும் காயங்களை மறக்க முடியவில்லை. தொடர்ந்து தேர்தல் ஆணையம் குக்கர், தொப்பிகளில் செய்த சம்பவங்கள் மேலும் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது. அதனால் அங்கீகாரம் என்பது முதல் தேவையாக அமமுகவுக்கு உள்ளது! தனி சின்னம் 
இரண்டாவதாக, தினகரன் அணி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தனிச் சின்னம் ஒதுக்க மறுத்து, பின்னர் பரிசுப்பெட்டி சின்னம் வழங்கியது. இதனால் வேட்பாளர்கள் எல்லாருமே சுயேட்சை என்ற விசயத்தில் அடங்கி போய் போட்டியிட்டனர். அவர்கள் வெற்றி பெற்றாலும் சுயேட்சைகளே!
 மூன்றாவதாக, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அமமுக ஓரளவு செல்வாக்கை பெறும் என்று முந்தைய கருத்து கணிப்புகள் கூறின. அதாவது குறைந்தது 5 இடங்களையாவது அமுமக பெறும் என்று அந்த கணிப்பில் சொல்லப்பட்டது. ஒருவேளை பெரும்பான்மையுடன் அமமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், இப்போது தொடங்கி உள்ள கட்சி அதற்கு வேராக இருக்கும். 
நான்காவதாக, தனித்து போட்டி என்று தினகரன் அறிவித்தும் ஒற்றைக் கட்சியைத் தவிர யாரும் அவருடன் கூட்டணி வைக்கப் போகவில்லை. ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் குறிப்பிட்ட வாக்கு விழுக்காட்டைப் பிடித்து, அதன்மூலம் கட்சியை பலமாக வைத்திருந்தால், பிற கட்சிகள் தங்களைத் தேடி வருவதற்கான சூழலை உருவாக்குகிறார் தினகரன்! 
ஐந்தாவதாக, இப்படி ஒரு கட்சியை வளர்ப்பது, கிட்டத்தட்ட அதிமுகவுக்கு ஆப்பு அடிப்பது போலதான். இராகிநகர் தேர்தல் வெற்றிக்கு பிறகு எத்தனையோ பேர் அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு தாவினார்கள். அதுபோல வரப்போகிற தேர்தல் முடிவுகள் மூலம் எத்தனை பேர் தினகரன் பக்கம் சாய உள்ளார்களோ தெரியாது. அதற்கான வேலைகளும் நடந்து வருகிறதா என்றும் உறுதியாக தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் தேர்தல் முடிவுகளை வைத்து இப்போதைய அதிமுக அதிருப்திகள் நாளைக்கு அமமுகவில் இணையவும் வாய்ப்பு உள்ளது. 
ஆறாவதாக, ஒருவேளை தினகரனுடன் அதிமுக இணக்கமாகும் சூழல் வந்தால், அதிமுக-அமமுகவும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படலாம். இது இரு கட்சியில் உள்ள பலரது மறைமுக விருப்பமாக உள்ளது! 
ஏழாவதாக, அதிமுக மீது உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருப்பதாக ஒருமுறை அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதனால் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படும் சசிகலா, விரைவில் சிறையில் இருந்து விடுதலையாகி அதிமுகவை உரிமை கோரும் வழக்கை தொடர்ந்து நடத்தவும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலம் எப்படி எப்படியோ, கூட்டி கழித்து பார்த்தாலும் தினகரனின் மாஸ்டர் பிளான் பின்னால் தமிழக அரசியலின் எதிர்காலம் ஏதோ ஒன்றில் இணைந்துள்ளதாகவே தெரிகிறது!'
ஸ்டாலின் தற்காலிக உடனடித் தீர்வாகவும், தினகரன் தொடர் தீர்வாகவும், சீமான் நிரந்தரத் தீர்வாகவும் பார்க்கப் படுகிற பார்வை பிரபல இதழ்கள் மட்டத்தில் இருந்து வருகிறது.
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,128.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.