Show all

உச்சஅறங்கூற்றுமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார்! தலைமை அறங்கூற்றுவர் இரஞ்சன் கோகோய் மீது

படர்க்கை நிலையில் எந்த அறங்கூற்று மன்றத்தின் மீதும் எந்த பொது மனிதரும் இது வரை எந்தக் குற்றமும் சுமத்தியதில்லை. அதற்கான காரணங்கள் இரண்டு வகையாக இருக்கலாம். 
ஒன்று: அறங்கூற்று மன்றங்கள் நியாயத்தை நிலைநாட்டுவதில் முள்ளின் மேல் நிற்கிற அளவிற்கு நியாயத்தை, நேர்மையை கடைபிடிப்பதில் தூய்மையானவைகள் என்று கொள்ளலாம். இரண்டாவது: அறங்கூற்று மன்ற அவமதிப்பு வழக்குக்கு பயந்து நமக்கேன் வம்பு என்று ஊடகங்கள் உட்பட யாரும் அறங்கூற்றுமன்றத்தின் மீது எந்தக் குற்றச்சாட்டும் வைக்கவில்லை என்றும் கருதலாம். 
அண்மைக் காலத்தில் அறங்கூற்றுமன்றத்திலிருந்து தன்மை முன்னிலைகளாக குற்றச்சாட்டுகள் எழுவதிலிருந்து இரண்டாவது காரணமே சரி என்கிற கருதுகோள் தவறானதாக முடியாது.
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமை அறங்கூற்றுவர் இரஞ்சன் கோகோய்மீது, உச்சஅறங்கூற்றுமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். 
அந்தப் பெண் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல் கடந்த ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் கோகோயின் அறங்கூற்றுமன்ற அறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
கடந்த 25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120 வியாழக்கிழமை யன்று (11.10.2018) இரஞ்சன் கோகோய் தம்மிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக அந்த பெண் புகார் கூறியதாகவும், இதைத் தொடர்ந்து அந்த பெண் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தி வயர், ஸ்குரோல் உள்ளிட்ட 4 இணைய தளங்கள் செய்தி வெளியிட்டன.
பணிநீக்கத்திற்குப் பிறகும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் துன்புறுத்தல் தொடர்வதாகவும், கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட பொய்யான ஊழல் குற்றச்சாட்டில் தாம் கைது செய்யப்பட்டதாகவும் அந்த பெண் புகார் கூறியுள்ளதாக திவயர் உள்ளிட்ட இணைய தளங்கள் செய்தி வெளியிட்டன. 
நடந்தவற்றை எல்லாம் விரிவாக விளக்கி அந்தப் பெண் உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் அனைவருக்கும் பிரமாண பத்திரம் அனுப்பியதாகவும், செய்தி வெளியிட்ட இணைய தளங்கள் கூறியிருந்தன. 
இந்நிலையில், இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டதன் அடிப்படையில், தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகோய், அறங்கூற்றுவர்கள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. உச்சஅறங்கூற்றுமன்றத்தில் இன்று காலை அந்த சிறப்பு அமர்வு கூடியது. 
தம் மீதான குற்றச்சாட்டு நம்பமுடியாததாக இருப்பதாகவும், பண விவகாரத்தில் தம்மை சிக்க வைக்க முடியாது என்பதால் இத்தகைய விவகாரங்களை எழுப்பப்படுவதாகவும் ரஞ்சன் கோகோய் கூறினார். 
20 ஆண்டுகள் பணிபுரிந்து, வெறும் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே வங்கி இருப்பு வைத்துள்ள தலைமை அறங்கூற்றுவருக்கு கிடைத்துள்ள பரிசு இது என்றும் அவர் குறிப்பிட்டார். 
தம் மீதான குற்றச்சாட்டு நம்ப முடியாததாக இருப்பதாகவும், இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அளவுக்கு தரம் தாழ்ந்து செல்ல வேண்டியிருக்கும் என தான் நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றும் ரஞ்சன் கோகோய் கூறினார். 
தம் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அறங்கூற்றுத்துறையின் சுதந்திரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தாம் பதவிக் காலம் உள்ளவரை எவ்வித அச்சமுமின்றி வளைந்து கொடுக்காமல் பணியாற்றப் போவதாகவும் தலைமை அறங்கூற்றுவர் இரஞ்சன்கோகோய் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பின்னர் மிகப்பெரிய சக்தி இருப்பதாகவும், தலைமை அறங்கூற்றுவரின் அலுவலகத்தையே முடக்க அத்தகைய சக்திகள் விரும்புவதாகவும் அவர் கூறினார். அறங்கூற்றுத்துறையை சீர்குலைக்க மிகப்பெரிய சதி நடைபெறுவதாகவும் தலைமை அறங்கூற்றுவர் இரஞ்சன்கோகோய் குறிப்பிட்டார். 
அடுத்த கிழமையில் முதன்மையான வழக்குகளை விசாரிக்க இருந்ததாகவும், அதிலிருந்து தடுப்பதற்கே இந்த முயற்சி நடைபெறுவதாகவும் ரஞ்சன் கோகோய் குறிப்பிட்டார். தலைமை அறங்கூற்றுவர் இரஞ்சன்கோகோய் உள்ளிட்ட 3 அறங்கூற்றுவர் அடங்கிய சிறப்பு அமர்வு கூடியபோதும் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லையாம். 
ஆனால் அறங்கூற்றுத்துறையின் சுதந்திரம் தொடர்பான விசயம் என்பதால், அடிப்படை ஆதாரமற்ற விசயங்களில் ஊடகங்கள் கட்டுப்பாட்டுடன் செயல்படுமாறு அறங்கூற்றுவர்கள் கேட்டுக்கொண்டார்களாம். 
நேற்று அறங்கூற்றுவர் கர்ணன் கூறிய, அறங்கூற்றுவர்கள் சிலரின் மீதான பொருளாதாரக் குற்றச்சாட்டு அறங்கூற்றுத் துறை அவமதிப்பாக அவருக்கே தண்டனை வழங்கப்பட்டு முடித்துக் கொள்ளப் பட்டது. 
இன்று அறங்கூற்றுத் துறையின் தன்மை முன்னிலைகளுக்குள்  இந்த பாலியல் குற்றச்சாட்டு அறங்கேறியிருக்கிறது. நமக்கேன் வம்பு படர்க்கை நிலையில் நின்று அமைதியாக வேடிக்கை பார்ப்போம். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,128.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.