Show all

சென்னையில் கைப்பற்றப்பட்டவை ஆட்டுக்கறிதாம்! நாய்க்கறி இல்லை. உறுதி செய்தது ஆய்வு முடிவு

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் கைப்பற்றப் பட்;;;ட 2000 கிலோ இறைச்சி ஆட்டுக்கறிதாம்! 

நாய் கறி கிடையாது, என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், ஜோத்பூரிலிருந்து வந்த தொடர்வண்டியில் இருந்து 21 பெட்டிகளில் இறைச்சி கைப்பற்றப்பட்டன. தொடர்வண்டி பாதுகாப்பு படை உதவியோடு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இந்த இறைச்சிகளை கைப்பற்றி அவற்றை மாநகராட்சி குப்பை கூடத்திற்கு கொண்டு சென்று அழித்தனர். 

இந்த இறைச்சியின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது, நாய்க்கறியாக இருக்குமா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்தது. வால் பகுதி நீளமாக இருந்தது, கழுத்து பகுதி ஒடுங்கியிருந்தது போன்றவை இந்த சந்தேகங்களுக்கு காரணம் என்று தற்போது விளக்கம் அளிக்கப் படுகிறது.
 
வேப்பேரி கால்நடை மருத்துவமனை கல்லூரியிலுள்ள, பரிசோதனை கூடத்திற்கு, இறைச்சி மாதிரிகள் அனுப்பபட்டன. தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது. எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் கைப்பற்றப்பட்டவை, ஆட்டு இறைச்சிதான். நாய் இறைச்சி கிடையாது, என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ரேடியோலஜி உள்ளிட்ட சோதனைகள் மூலமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆடு அல்லது செம்மறியாடு இனத்தை சேர்ந்த இறைச்சிதான் இது. நாய் இறைச்சி இல்லை என்று உறுதியாக தெரிவிக்கிறது ஆய்வு முடிவு. 

21 பெட்டிகளில் வந்த இறைச்சி அனைத்துமே கெட்டுப்போனவை என்றும், எனவே அவற்றை அழித்ததில் தவறு இல்லை என்பதால் தொடர்வண்டித்துறை அதிகாரிகளும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் சர்ச்சையில் இருந்து தப்பி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 

நாய்க்கறி என அவசரப்பட்டு அவர்கள் எடுத்த முடிவு காரணமாக, மக்கள் மத்தியில் இத்தனை நாட்களாக நாய்க்கறி பீதி நிலவியது. சென்னையில், சிறு, குறு உணவகங்களின்  வணிகம் படுத்துவிட்டது. இனியாவது உரிய ஆதாரங்கள் இல்லாமல் அதிகாரிகள் வதந்தி பரப்ப கூடாது என்பதே மக்கள் கோரிக்கை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,979.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.