Show all

எழுத்தாளர்கள், கலைஞர்கள் கொந்தளிப்பு- வாயில் கறுப்புத் துணி கட்டி பேரணி! புத்தக கண்காட்சி நடத்துநர்களுக்கு எதிராக

43வது சென்னை புத்தகத் திருவிழாவில்- அரசை விமர்சிக்கும் வகையில் புத்தகம் விற்கக்கூடாது என்ற தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி பேரணி.

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பதவியை சதமெனப் பகற்கனவுகண்டு, அறிஞர்களின் தகுதியறியாமல், அவர்களை அவமதித்தவர்கள் காலங்காலமாய்த் தூற்றுதலுக்கு ஆளாகிவிடுகின்றனர். அதனால்தான் வான்புகழ் வள்ளுவர்,
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை
என்று எச்சரிக்கிறார்.
கம்பனை அவமதித்தான் குலோத்துங்கச் சோழன். கடற்கடந்த பேரரசின் அதிபதியவனுக்கு, பேரரசன் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. சோழ அரசவையிலிருந்து வெளியேறிய கம்பனிடமிருந்து வெடித்து வந்ததொரு வெண்பா.
மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்தும் உண்டோ - உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு
சோழனின் அரசாங்கம் சுவடின்றி அழிந்தபின்னும் சொல்லரசன் கம்பனின் வெண்பா சுடர்வீசி நிற்கிறது. செங்கோல்கள் வீழ்ந்த பிறகும், எழுதுகோல்கள் உயிர்ப்புடன் நிற்கின்றன.
அரண்மனையும், ஆடம்பர வாழ்வும், ஆணவப்போதையை அதிகம் ஊட்டும்போது, எதிரில் வருவோர் யாவரையும் ஏளனமாய்க் கருதினால், இழிவு சுமக்கநேரும் என்று எச்சரித்து உச்சரிக்கின்றன இறவாத பாடல்கள் சில.
உச்சமெனப்பட்ட அரசனின் அதிகாரத்தைத் துச்சமெனக் கருதிய தூய புலவர்கள் வரலாறுகளில்வாழ்கின்றனர்.
நாமார்க்கும் குடியல்லோம்,
நமனை அஞ்சோம்
- என்றார் திருநாவுக்கரசர்.
சிறு பதவிகளில் இருப்போர்கூட தங்கள் செம்மாந்த அதிகாரத்தை நிலைநாட்ட, தனக்குக் கீழுள்ளவர்களை அவமதிப்பதையும், அலைக்கழிப்பதையும் பல இடங்களில் பார்க்கமுடிகிறது.
நம் அதிகாரத்தைக் காட்டி விட்டோம் என்கிற அற்ப இன்பத்தை அவர்கள் அடையலாம். ஆனால், சொல்லேருழவர்களின் சூட்டுக்கு ஆளானால், அது காலங் காலமாய் வடுவாய் நின்று வருத்தும் என்பதைமமதை மனிதர்கள் அறியத் தவறுகின்றனர்.
ஒரு முறை, மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுதி முடித்த படமொன்றிற்கு ஊதியம் பெறுவதற்காக தயாரிப்பாளரைப் பார்க்கச் சென்றுள்ளார்.
தருக்கும், செருக்கும் கொண்ட அந்தத் தயாரிப்பாளர், பட்டுக்கோட்டையாரை ‘வெளியே நில்லுங்கள்’ என்று கூறுகிறார். பாட்டுக்கோட்டையோ, தன்பாட்டையே சூட்டுக் கோலாக்கிச் சுடச் சுட எழுதினார்,
தாயால் பிறந்தேன், தமிழால்
அறிவுபெற்றேன்
நாயே நேற்றுன்னை நடுத்தெருவில்
சந்தித்தேன்
நீ யார் என்னை நில்லென்று சொல்ல
அதிகாரங்களுக்கு அடங்காமல், மமதையாளர்கள்முன் மயங்காமல், அறிவு நாணயத்தோடு வாழ்ந்த அறிஞர் பெருமக்கள், சிறுமை கண்ட இடங்களிலெல்லாம் சிங்கமெனப் பொங்கியுள்ளனர்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி அநீதிகளை அரங்கேற்றுவோர், சமகாலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திலும் தூற்றப்
படுவர்.
அதிகாரத்தால் அராஜகம் செய்வோரின் வாழ்வு எப்படிஇருக்கும் என்பதை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்கு ஒன்று நயம்பட விளக்கும்.
‘அதிகாரி வீட்டு நாய் செத்தது
அனைவரும் வந்தார்கள்
அதிகாரியே செத்தார்
ஒரு நாயும் வரவில்லை’
ஓய்வில்லா அடக்குமுறையை செலுத்தியவர்கள், ஓயும்போது நாயும் வராது என்பதற்கு இந்த நறுக்கு ஒருநல்ல சான்று.
அதிகாரங்களில் பெரிய அதிகாரம் ஆட்சியதிகாரம். ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசன், மக்களை விட மேம்பட்டவன். அவன் சராசரி குடிமக்களுக்குச் சமமானவன் இல்லை என்பது உலகளாவிய அளவில் உள்ள உளப்பான்மை.
ஓங்கிய உயர்விலும் பாங்குற நடந்த பண்பாளர்களை உலகம் போற்றிகொண்டே இருக்கிறது.
அதிகாரத்தில் இருக்கையில் அகங்காரத்தைக்காட்டியவர்களை அகிலம் தூற்றிக் கொண்டே இருக்கிறது.
உலகம் தூற்றும் வாழ்வு வாழோம்; போற்றும் வாழ்வு வாழ்வோம்! இதுதான் காலங்காலமான தமிழகத்துப் புலவர்கள் படைப்பாளிகள் வரலாறு.

42ஆண்டுகளாக சிறப்பாய் புத்தகக் கண்காட்சி நடத்தி வந்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு, திடீரென்று என்ன ஆயிற்று. ஏன் இந்த அடிமைத்தனம்? தமிழகத்து எழுத்தாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

அரசை விமர்சிக்கும் வகையில் புத்தகம் விற்கக்கூடாது என்ற தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக நந்தனம் புத்தகக் காட்சி அரங்க வாயிலில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி பேரணியில் ஈடுபட்டனர்.

43வது சென்னை புத்தகத் திருவிழா கடந்த கிழமை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் தொடங்கியது. புத்தகக் காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார். அப்போது முதலே சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

புத்தகக் காட்சியில் மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பக அரங்கில் அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அரங்கை காலி செய்யும்படியும் புத்தக காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், பதிப்பக உரிமையாளர் அன்பழகனுக்கு கவனஅறிக்கை அனுப்பியது.

இதையடுத்து, புத்தக அரங்கை அகற்ற மறுத்ததாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், புத்தக அரங்குகளில் புத்தக வெளியீடுகளையும், அறிமுக விழாக்களையும் நடத்தக்கூடாது எனவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகளை பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டித்துப் பேசி வருகின்றனர். நேற்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்ற எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்கள் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றாமல் வெளியேறினார்.

இந்நிலையில், இன்று அரசை விமர்சிக்கும் வகையில் புத்தகம் விற்கக்கூடாது என அறிவுறுத்திய தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக அரங்க வாயிலில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி பேரணி நடத்தினர்.

அ.தி.மு.க-வின் ஊழல் குறித்த புத்தகங்களை விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்ட இதழியலாளர் அன்பழகன் மீதான புகாரை திரும்பப் பெற வலியுறுத்தியும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் பேரணி நடத்துவதாக எழுத்தாளர்கள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.