Show all

பொங்கல்வாழ்த்துக்கள்! இன்று போகித்திருநாள். நாளை தமிழர் திருநாள் தைப்பொங்கல்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தைப்பொங்கல் என்பது உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மிகப்பெரிய விழா ஆகும். பொதுவாக தைப்பொங்கல் உழவுத்தொழிலுக்கு உதவி செய்த ஞாயிறு, இயற்கை, கால்நடைகள் மற்றும் பலவற்றிற்கு நன்றி தெரிவிக்கவே கொண்டாடப்படுகிறது.

பொதுவாக அறுவைடையில் இருந்து கிடைத்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட புதிய அரிசிகளை கொண்டு வெல்லம், நெய் மற்றும் பால் சேர்த்து புதிய மண்பானையில் பொங்கல் செய்வதே வழக்கம்.

பொங்கல் திருவிழா மிக தொன்மையான காலம் முதலே தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. மேலும் உலகில் மிக நீண்ட காலமாக கொண்டாடப்படும் விழாக்களில் பொங்கல் விழாவும் ஒன்று. குறிப்பாக பொங்கல் ஒரு மதம் சார்ந்த விழா கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் பெரும்பாலான கிருத்தவ தேவாலயங்களிலும், முஸ்லிம்களின் வீடுகளிலும் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கமாகவுள்ளது.

உலகின் நிறைய நாடுகளில் தைப்பொங்கல் நாளை, தமிழர் திருநாளாக அறிவித்துள்ளது. மேலும் கனடா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தைப்பொங்கல் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதை அனைவரும் அறிவோம்.

தமிழர் திருநாளான பொங்கல் போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பெருவிழாவாகும்.

போகி அல்லது காப்புக்கட்டு

போகி என்பது பொதுவாக பழையன கழித்தல் மற்றும் புதியன புகுதல் என்பதன் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. உழவர்கள தாங்கள் அறுவடை செய்த புதிய பொருள்கள் அனைத்தையும் எடுத்து வருவதன் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள் மற்றும் வீடுகளில் உள்ள பொருள்களை எல்லாம் தூய்மை செய்து, வாசல்களில் மாட்டுசாணமிட்டு மேலும் வீடுகளை பீளைப்பூ, ஆவாரம்பூ, மற்றும் வேம்பு கொண்டு ஒப்பனை செய்வது இந்நாளின் வழக்கம். போகி அல்லது காப்புக்கட்டு விழாவை, மார்கழி மாதம் கடைசி நாளான இன்று சிறப்பாகக் கொண்டாடினோம்.

தைப்பொங்கல்

நாளை தை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் முதன்மை விழாவாக அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. ஞாயிறுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவதால் இது ஞாயிறுபொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.

மாட்டுப்பொங்கல்

நாளை மறுநாள் உழவுத்தொழிலுக்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்போகிறோம். இந்நாளில் மாடுகள் மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டி தூய்மை செய்து, கொம்புகளுக்கு வண்ணம் பூசி அழகுபடுத்தி, பொங்கல் செய்து அவற்றிற்கு படைத்து வணங்குவது வழக்கம். ஒரு சிலர் இந்நாளில் வீட்டு தெய்வத்தை வழிபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

காணும் பொங்கல்

இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வது வழக்கம். மேலும் சல்லிக்கட்டு, கபடி, வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற வீர விளையாட்டுக்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுகள் என ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் இந்நாளில் நடத்துவது வழக்கம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.