Show all

அரசுக்கு நெருக்கடி கொடுக்க, திமுக முக்கிய முடிவுகள் எடுக்குமா

அதிமுக சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக திமுக சட்டமன்றஉறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறவுள்ளது.

முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 அதிமுக சட்டமன்றஉறுப்பினர்களை பேரவைத் தலைவர் பி.தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதையடுத்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த தலைவர்கள், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டத்துக்கு புறம்பான, மக்களாட்சிக்கு விரோத நடவடிக்கை. பேரவைத் தலைவரும், முதல்வரும் கூட்டு சேர்ந்து மக்களாட்சியைக் படுகொலை செய்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 சட்டமன்றஉறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த 4 சட்டமன்றஉறுப்பினர்கள் பேரவைத் தலைவரிடம் புகார் கொடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், தற்போது குறுக்கு வழியில் ஆட்சியை தக்க வைப்பதற்காக 18 பேரை தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

சட்டப்பேரவையில் குட்கா பொட்டலங்களை காட்டியதாக திமுக சட்டமன்றஉறுப்பினர்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதைத் தடுக்க அறங்கூற்றுமன்றம் சென்றுள்ளோம். மக்கள் மன்றத்திலும் போராடுவோம். தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக திமுக சட்டமன்றஉறுப்பினர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று) நடக்கவுள்ளது. தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதரணமான அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசித்து முக்கிய முடிவெடுப்போம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநர், குடியரசுத் தலைவரிடம் திமுக முறையிட்டது. உயர் அறங்கூற்றுமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் 18 சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் அறங்கூற்றுமன்றம் செல்வதா அல்லது மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் திமுக கூட்டணி சட்டமன்றஉறுப்பினர்கள் கூண்டோடு விலகுவது அல்லது முழு அடைப்பு நடத்துவது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்றஉறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நாளை நடக்கவுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி உட்பட 8 சட்டமன்றஉறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 18 சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.