Show all

திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பாணை

முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், நேரில் ஆஜராகுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பாணை அனுப்ப சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்களில், நவம்பர் 21-ஆம் தேதியிட்ட திமுக நாளிதழில் கருணாநிதி எழுதியுள்ள கட்டுரையில், தமிழக அரசு குறித்தும், முதல்வர் குறித்தும் உண்மைக்கு மாறாக, உள்நோக்கத்துடன் அவதூறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். இது, தமிழக அரசுக்கும், முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, நாளிதழின் ஆசிரியர், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இதேபோல், தமிழ் வாரப் பத்திரிக்கை ஒன்றில் (நவம்பர் 21-27) வெளியான செய்தி தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலிலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே, இதை வெளியிட்ட வாரப் பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த 2 மனுக்களும், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு, மனுக்களில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதால், அதுகுறித்து அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க கருணாநிதி, திமுக நாளிதழின் ஆசிரியர் ஆகியோருக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்ப நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.

இதேபோன்று, தமிழ் வாரப் பத்திரிகைக்கு எதிரான அவதூறு வழக்கில், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி ஆஜராக அழைப்பாணை அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.