Show all

வெளிநாட்டுக் கார் வாங்கி வம்பில் மாட்டிக் கொண்ட சசிகலாவின் கணவர் நடராசன்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலாவின் கணவர் நடராசன் தமிழ்தொடர்ஆண்டு-5096ல் (1994) லண்டனிலிருந்து, ‘லெக்சஸ்என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராசன் இறக்குமதி செய்தது தமிழ்தொடர்ஆண்டு-5096ல் (1994) உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது. இதன்மூலம், ரூ.1.06 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் நடராசன், அவரின் உறவினர் வி.என்.பாஸ்கரன், லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் யோகேஷ், சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி மேலாளர் சுஸ்ரிதா உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஐந்து பேரில் ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கை நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை விசாரித்தது. இதனிடையே ,சொகுசு கார் இறக்குமதி தொடர்பாக அமலாக்கத்துறையும், தனியாக நடராசன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராசனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5112ல் (2010) சிறப்பு அறங்கூற்று மன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து நடராசன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் அறங்கூற்றுமன்றம், சிறப்பு அறங்கூற்றுமன்றம் நடராசனுக்கு விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியது. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் நடராசனுக்கு, சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது அ.தி.மு.க வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-சிக்க வைத்து மட்டும் தண்டிப்பது என்றில்லாமல் எல்லா காலத்திலும் எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும் என்றிருந்தால் தான் தண்டனைக்கு மரியாதை. இது போன்ற தண்டனைகள் எல்லாம் குற்றம் செய்யக் கூடாது என்ற அச்சத்திற்கு பதிலாக செய்த குற்றத்தில் எப்போது யாரோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்ற பாடத்தைதான் தரும். அதனாலேயே இது போன்ற தண்டனைகளுக்கு பொதுமக்களிடம் போதுமான மரியாதை இல்லை.

தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,609

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.