Show all

பறக்கும் ரயிலில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீயினால் பயணிகள் பீதியடைந்தனர்.

சென்னை கடற்கரை, வேளச்சேரி நிலையங்களுக்கு இடையில் ஓடும் பறக்கும் ரயிலில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீயினால் பயணிகள் பீதியடைந்தனர்.

வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற அந்த ரயிலில் காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என கருதப் படுகிறது. முதலில் ஒரு பெட்டியில் பற்றிய தீ, மளமளவென அடுத்த பெட்டிக்கும் தாவியது.

இதனால், அந்த இரு பெட்டிகளில் இருந்த பயணிகள் பீதியில் அலறித்துடித்தனர். அவர்களில் சிலர் அபாயச் சங்கிலியை பிடித்து, இழுத்து ரயிலை நிறுத்த முயன்றனர். வேகம் குறைந்ததும் உயிர் பயத்துடன் அவர்கள் அனைவரும் பெட்டிகளில் இருந்து கீழே குதித்து, தப்பினர்.

இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினரும், ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் போராடி, தீயை அணைத்தனர். எனினும், இவ்விபத்தில் ஒரு பெட்டி முழுவதுமாக எரிந்து நாசமடைந்தது.

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயை அணைக்கப் போராடிய ஒரு தீயணைப்பு வீரர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்ததாக தெரிகின்றது.

இந்த விபத்தையடுத்து, வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் வழித்தடத்தில் பறக்கும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் இன்னலுக்குள்ளாகினர்.

இவ்விபத்துக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, எம்.ஆர்.டி.எஸ். எனப்படும் சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மூத்த ரயில்வே அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.