Show all

மாதந்தோறும் ரூ.50,000 பென்ஷன். வாங்க அமிதாப்பச்சன் மறுப்பு.

ஏழ்மையில் வாடும் யாஷ் பாரதி விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 பென்ஷன் வழங்க உ.பி, அரசு முடிவு செய்தது. அதன்படி, இவ்விருது பெற்ற பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன் மற்றும் மகன் அபிஷேக் ஆகியோருக்கு மாதந்தோறும் தலா ரூ. 50,000 வழங்க முடிவு செய்தது. இதனை வாங்க அமிதாப்பச்சன் மறுத்துவிட்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் 1994ம் ஆண்டு முதல் சிறந்த கலைஞர்களுக்கு யாஷ் பாரதி சம்மான் என்ற விருது வழங்கப்பட்டு வந்தது. சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இல்லாத போது இந்த விருது நிறுத்தப்பட்டது. தற்போது இந்த விருதை மீண்டும் வழங்க திட்டமிட்டுள்ள உ.பி, அரசு, இதற்கு முன் விருதுபெற்று, ஏழ்மையில் வாடுபவர்களுக்கு வாழ்நாள் பென்ஷனாக மாதந்தோறும் ரூ. 50,000 வழங்க அமைச்சரவை கூடி முடிவு செய்தது.

உ.பி., அரசின் மிக உயரிய கவுரவ விருதான இவ்விருது 1994ம் ஆண்டு அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சனுக்கு வழங்கப்பட்டது.

2006ம் ஆண்டு இவர்களின் மகனான அபிஷேக் பச்சனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இதனால் நலிவடைந்த விருதாளர்கள் பட்டியலில் இவர்கள் 3 பேரின் பெயர;களும்; சேர்க்கப்பட்டன.

படங்கள், விளம்பர படங்கள் போன்றவற்றில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று வரும் அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கு மாத பென்ஷன் வழங்க உபி, அரசு முடிவு செய்துள்ள செய்தி பல்வேறு வடமாநில பத்திரிக்கைகளில் முதல்பக்க செய்தியாக வந்து பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இதனையடுத்து, உபி, முதல்வர் அகிலேசுக்கு அபிதாப் பச்சன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், எங்கள் குடும்பத்திற்கு உபி,அரசு அளித்துள்ள இந்தக் கவுரவத்தை மதிக்கிறேன். மாத பென்ஷனாக ரூ.50,000 கொடுக்க முடிவு செய்திருப்பதாக பத்திரிக்கைகளில் படித்தேன். இதனால் எங்கள் குடும்பத்திற்கு அளிக்க நினைக்கும் பென்ஷன் தொகையை ஏதாவது சேவை திட்டத்திற்கோ அல்லது ஏழ்மையில் தவிக்கும் கலைஞர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

உபி, அரசு வழங்க முடிவு செய்துள்ள இந்தத் தொகை நாட்டிலேயே மிக அதிகமான பென்ஷன் தொகையாகும். அரசு குறிப்பின்படி, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ரூ20,129ம், அந்தமான் சிறையில் அடைக்கப்பவர்களுக்கு ரூ23,309ம், சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த திருமணமாகாத மற்றும் வேலையில்லாதவர்களுக்கு ரூ4,770ம் மாத பென்ஷனாக கொடுக்கப்படுகிறது.

உபி, அரசில் கலாச்சார விருது பெற்றவர்களுக்கு ரூ2000ம்,

25 முதல்தர போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ15,000ம்,

100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ50,000ம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.