Show all

கொண்டாடத்தக்க வகையில் சான்றுகளை வழங்கி வருகிறது! ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டை

கொண்டாடத்தக்க வகையில் சான்றுகளை வழங்கி வருகிறது! ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டை

வருங்காலங்களில் நடைபெறும் அகழாய்வுகளில் நிறைய வியப்புகள் பொற்பனைக்கோட்டை வாயிலாய் வெளியாகலாம். என்று தெரிவிக்கப்டுகிறது.

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள பழமையான செங்கல் கோட்டையாகும். பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த கோட்டை எண்ணூறு ஆணடுகளுக்கு முன்பு முத்தரைய மன்னராலும், பின்பு இருநூறு ஆண்டுகள் கடந்து, நாயக்க மன்னர்களால் பெரியளவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஓரளவு முழுமையான நிலையில் இருக்கும் ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டை கொண்டாடத்தக்க வகையில் சான்றுகளை வழங்கி வருகிறது.

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் மேற்கொண்ட மேற்பரப்பு ஆய்வின் மூலமாக சங்ககால செங்கல் மற்றும் பானை ஓடுகள் இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தினார். 

பொற்பனைக்கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக மேலாய்வு செய்ததைத் தொடர்ந்து இரும்பு உருக்கு தொழிற்சாலை, இரும்பு உருக்குக் கழிவுகள், சுடுமண் குழாய்கள், உருக்கு கலன்கள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன.

இதைத் தொடர்ந்து கோட்டையின் மேற்பரப்பில் இருக்கும் கட்டுமானங்களில் கொத்தளங்கள் உள்ளிட்டவை இருப்பதையும் கண்டறிந்தனர். இந்நிலையில் அண்மையில் நடத்திய அகழாய்வில்- நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட செங்கல் கட்டுமான நீர்த்தடக் கால்வாய் அமைப்பு அகழ்வாய்வு குழியில் வெளிப்பட்டிருக்கிறது.

அரண்மனை மேட்டை நோக்கி இக்குழாய் அமைந்திருப்பது கூடுதல் முதன்மைத்துவம் பெறுகிறது.

நகர நாகரிகத்திற்கான முதன்மைக் குறியீடாகத் தொல்லியல் துறையினரால் பார்க்கப்படும் இந்தக் கால்வாய் அமைப்பு கிடைத்திருப்பது, பொற்பனைக் கோட்டையின் மீது சிறப்புக் கவனத்தைத் திருப்பியுள்ளது. 

கீழடி உள்ளிட்ட ஒரு சில பகுதிகள் மட்டுமே இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் கோட்டை மற்றும் அதுசார்ந்த வாழ்விடம் குறித்த எவ்வித ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க வகையில் மேற்கொள்ளப்படவில்லை. 

குறிப்பாக தஞ்சாவூர் வல்லம் பகுதியில் இருந்த சங்ககாலக் கோட்டை முழுவதுமாகச் சிதைந்துவிட்ட நிலையில் சங்ககாலப் பாடல்களில் கூறப்பட்ட அனைத்து உருப்புகளும் கொண்ட ஒரே கோட்டையாக பொற்பனைக்கோட்டை இருப்பது இந்த அகழ்வாய்வின் முதல் கட்டத்திலேயே வெளிப்பட்டிருக்கிறது. 

தற்போது அகழ்வாய்வு செய்யப்படும் இடத்திற்கு மேற்குப் புறத்தில் அமைந்திருக்கும் அரண்மனை மேட்டுப் பகுதியில் மிக முதன்மையான கட்டுமானங்கள் இருக்கும் வாய்ப்புள்ளது. வருங்காலங்களில் நடைபெறும் அகழாய்வுகளில் நிறைய வியப்புகள் பொற்பனைக்கோட்டை வாயிலாய் வெளியாகலாம். என்று தெரிவிக்கப்டுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,302.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.