Show all

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழு அமைத்திட ஆணை! உயர் அறங்கூற்று மன்ற மதுரை கிளை

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன், உயர் அறங்கூற்று மன்ற மதுரை கிளையில் பதிகை செய்த மனு: 

தமிழகத்தின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழந்தமிழ் மன்னர்கள் கட்டியது முதல் அண்மைக் காலத்தில் பொதுமக்களால் கட்டப் பட்டது வரையிலான, ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் நிர்வாகம் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும். 

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. தக்கார் மட்டுமே உள்ளனர். இதனால் கோயில்களில் அடிப்படை வசதிகளை செய்வது, புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் வெளிப்படைத்தன்மை இல்லாத சூழல் உள்ளது.

அறங்காவலர் குழு இல்லாததால் தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து, திருச்செந்தூர் கோயிலின் வெளிப்பிரகார மண்டம் இடிந்தது போன்ற பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அறங்காவலர் குழு இருந்திருந்தால் முன்கூட்டியே தேவையான பாதுகாப்பு வசதிகள், அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும். எனவே அறங்கூற்றுமன்றம் தலையிட்டு அனைத்து அறநிலையத்துறை கோயில்களில் அறங்காவலர் குழுவை நியமித்து, அந்தக் குழுவில் உரிய இடஒதுக்கீடு அடிப்படையில் பெண்கள், தாழ்த்தப்பட்டோரை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மேலும் தக்கார் என்ற ஒரு நபரின் கீழ் கோயில் நிர்வாகம் செயல்படுவதாகவும் மனுவில் புகார் கூறப்படுகிறது. தக்கார் பதவி ஊழல், முறைகேடுகளுக்காக பயன்படுத்துப்படுவதாக மனுதாரர் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுவர்கள், அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்கள், ஒரு மாதத்தில் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,043.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.