Show all

அணுசக்தி கழகத்துக்கு 947.99கோடி இழப்பு, இழுபறி! அணுஉலையே ஆபத்து; அதிலே இதெல்லாம் வேறயா?

06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குப் போதுமான அளவு பயிற்சியில்லாத, அனுபவமில்லாத ஊழியர்களை நியமித்ததாலும், அணு உலைகளைத் தாமதமாக இயக்கியதாலும் கடந்த ஆண்டில் இந்திய அணுசக்தி கழகத்துக்கு 947.99 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்யக் கூட்டமைப்பு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இரு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்புவது, தொழில்நுட்பக் காரணங்களால் கடந்த ஆண்டு 60 நாட்கள் மூட முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் 162 நாட்கள் கூடுதலாக மூடப்பட்டது. இதனால், இந்திய அணுசக்தி கழகத்துக்கு ரூ.948 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியின் இணையதளத்தில் ஆண்டு அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டு இருப்பதாவது:

கடந்த ஆண்டில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ள முதலாம் அலகில் எரிபொருள் நிரப்புவதற்காக 60 நாட்கள் இந்திய அணுசக்தி கழகம் நிறுத்திவைத்தது. ஆனால், தன்னுடைய பணியாளர்களுக்குப் போதுமான அனுபவம் இல்லை என்பதைத் தாமதமாக உணர்ந்த காரணத்தால், ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள ஏஎஸ்இ நிறுவனத்தில் இருந்து அதிகாரிகளை அழைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன்படி என்பிசிஐஎல் மற்றும் ரஷ்யாவின் ஏஎஸ்இ இடையே கடந்த ஆண்டு புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி ரஷ்யாவில் இருந்து சிறப்பு நிபுணத்துவம் பெற்ற பணியாளர்களை நியமிக்கப்பட்டனர். இது இந்திய அணுசக்தி கழகம் தனது சொந்தப் பணியாளர்களுக்கு கொடுக்கும் ஊதியம், செலவைக் காட்டிலும் கூடுதலாக 76 விழுக்காடு செலவானது. இது மிக உயர்ந்த ஊதியம், செலவு என்பதை அறிந்தும் வேறுவழியின்றி அணு உலையை இயக்க வேண்டி இருப்பதாலும், போதுமான கால அவகாசம் இல்லாத காரணத்தால், பேரம் ஏதும் பேசாமல் ரஷ்ய ஊழியர்கள் அழைக்கப்பட்டனர்.

இதனால், 60 நாட்கள் மட்டும் அணு உலையை மூடுவதாக முதலில் இந்திய அணுசக்தி கழகம் திட்டமிட்டு இருந்த நிலையில், இந்தத் தாமதம் காரணமாக 222 நாட்கள் ஆகின. ஏறக்குறைய முதல் அணு உலையை இயக்க 60 நாட்களுக்குப் பதிலாக கூடுதலாக 162 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அணுமின் நிலையத்தில் முதல் அணு உலைக்கு எரிபொருள் நிரப்ப தங்களிடம் இருக்கும் ஊழியர்கள், பணியாளர்களின் திறனை மதிப்பீடு செய்யாமல், உலையை மூட சுயமாக முடிவு செய்தது தவறாகும். மேலும், தொழில்நுட்பத் திறன் குறித்தும் உலையை மூடுவதற்கு முன் மதிப்பீடு செய்யவில்லை.

இதன் காரணமாக அணு உலையை மீண்டும் இயக்குவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டது. இதன் காரணமாக பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுசக்தி கழகத்திற்;கு ரூ.947.99 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு ரஷியாவில் இருந்து சிறப்பு தொழில் நிபுணத்துவம் பெற்ற ஊழியர்கள் தேவை என்பது முன்கூட்டியே எங்களுக்குத் தெரியும், வேறு வழியின்றிதான், அதிகமான பணம் கொடுத்து மாஸ்கோவின் ஏஎஸ்இ நிறுவன அதிகாரிகளை அழைக்க ஒப்புக்கொண்டோம். அவர்கள்தான் இந்தப் பணியை திறம்படச் செய்ய முடியும் என்று இந்திய அணுசக்தி கழகம் விளக்கம் அளித்துள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால், அணு உலையை மூடுவதற்கு முன்பாக, எரிபொருள் நிரப்புவதற்கு எந்தவகையான திறன்படைத்த அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவை என்பதை இந்திய அணுசக்தி கழகம் முறைப்படி கணிக்கவில்லை என்று தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியின் போது பல்வேறு பாகங்கள் பழுதடைந்த காரணத்தால், அதைச் சரி செய்து மீண்டும் இயக்க அதிகமான காலதாமதம் ஆனது. அதனால்தான் ரஷ்ய தொழில்நுட்ப அதிகாரிகள் அங்கு அதிக நாட்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே முதல் அணு உலையை மீண்டும் இயக்க 162 நாட்கள் கூடுதலாகத் தேவைப்பட்டது இதன்மூலம் இந்திய அணுசக்தி கழகம் ரூ.947.99 கோடி வருவாய்இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,824.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.