Show all

நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தகம் வெளியீடு! உழவனைக் கடனாளியாக்கி தள்ளுபடி செய்வது ஆட்சியாகாது

நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தக வெளியீட்டோடு, கரும்பு உழவன் சின்னம் மற்றும் தமிழகம், புதுச்சேரிக்கான நாற்பது வேட்பாளர் அறிமுகத்திற்காக நிகழ்த்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில்-   உழவனைக் கடனாளியாக்கி தள்ளுபடி செய்வது ஆட்சியாகாது என்று தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வைத்தார். சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் 'கரும்பு உழவன்' சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் வேட்புமனு பதிகை செய்துள்ளனர். 

சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்த நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அனைத்து வேட்பாளர்களையும் தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து சீமான் பேசினார். கார் தயாரிக்கும் முதலாளி வாழும் நாட்டில் சோறு தயாரிக்கும் உழவன் மரணிப்பது பெரிய முரண் என்றும், மற்ற கட்சிகளை போல் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டிய தேவை தங்களுக்கு எழாது என்றும், ஏனெனில் உழவர்களை கடனாளியாக்க மாட்டோம் என்றும் கூறிய சீமான், நாட்டு மக்கள் பசியில்லாமல் இரவில் தூங்க நடவடிக்கை எடுப்பேன் என தலைமைஅமைச்சர் வேட்பாளர்கள் மோடி, ராகுலால் உறுதி தர முடியுமா? என கேள்வி எழுப்பினார். 

இந்தப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தகமும் வெளியிடப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,101.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.