Show all

பெண் கல்விக்காக, 'பள்ளியில் இருங்கள்' இயக்கத்தில் நடிகை பிரியாமணி!

மாணவிகள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவது வழக்கமாகி வருகிறது. ஒரு பெண்ணாக இந்த விசயத்தில் பணியாற்றுவது என் கடமை. அதனால் பள்ளியில் இருங்கள் என்ற இயக்கத்தில் பங்காற்றுகிறேன் என்கிறார் நடிகை பிரியாமணி

  09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண் கல்விக்காக நிதி திரட்டும் வகையில், பெங்களூருவில் நடக்க இருக்கும் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு நடிகை பிரியாமணி ஓட இருக்கிறார்.

தமிழ்த் திரைப்படத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலர் முஷ்தபா ராஜ்ஜை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் குடியேறி விட்டார். இதையடுத்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

இதற்கிடையில், மாணவிகள் படிப்பைப் பாதியில் விடும் சூழல் இன்றும் நிலவி வருவதால், 'பள்ளியில் இருங்கள்' என்ற கருத்துப் பரப்புதலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த நிலையில், பெண் கல்விக்காக நிதி திரட்டும் வகையில், பெங்களூருவில் நடக்கும் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். வரும் 04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 சனிக்கிழமை யன்று (19.05.2019) நடக்கும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு பெண் கல்விக்காக நிதி திரட்ட இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலான பள்ளிகளில் சரியான கழிப்பக வசதி இல்லாதது, மாதவிலக்கு சுகாதார சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மாணவிகள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவது வழக்கமாகி வருகிறது. ஒரு பெண்ணாக இந்த விசயத்தில் பணியாற்றுவது என் கடமை. அதனால், இந்த ஓட்டப்  போட்டியில் கலந்து கொண்டு என்னால் ஆன சிறிய நிதியுதவி திரட்ட முன்வந்துள்ளேன். மேலும் இது போன்று பலரும் தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,100.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.