Show all

தலைப்பிலும் தமிழ் அடிப்படையை கொண்டாடும் முதலாவது அரசியல் கட்சி! நாம் தமிழர் கட்சி

உலகினர், பேரறிவுச் சோலையாக அறிந்த, நாவலந்தேயத்தை இந்தியா என்று ஒலித்து தேடிவந்தபோது, அவர்கள் தேடி வந்த நாவலந்தேயம் காணக்கிடைக்காதது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இங்கே தூக்கலாக கொண்டாடப்பட்ட சமஸ்கிருதமும் துவண்டு கிடந்த தமிழும் அவர்களைத் துணுக்குற வைத்தது. அவர்கள் தமிழை மீட்க முன்னெடுத்த முயற்சிகளின் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்தது திமுக. அந்த திமுக தமிழ் அடிப்படையில் தலைப்பைக் கொண்டிருக்கவில்லை. இன்றைக்கு தமிழ்நாடு கண்டிருக்கிறது தலைப்பிலும் தமிழ் அடிப்படையை கொண்டாடும் முதலாவது அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சியை. அது குறித்த ஓர் அலசலே இந்தக் கட்டுரை.

22,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலும் கூட அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. 

குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர்.

அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம். ஆனால் தமிழர்கள் மட்டுமே, உலகம் முழுவதும் கப்பல் செலுத்தி, தமிழ்நாட்டு முத்து, மயில்தோகை, ஏலம், மிளகு. மஞ்சள், மெல்லிய துணி வகைகள் ஆகியவற்றை விற்று வந்தார்கள். இந்தப் பொருள்களுக்கு மாற்றாக தமிழ்நாட்டில் கிடைக்கப் பெறாத தங்கத்தை மட்டுந்தாம் பண்டமாற்றாக வாங்குவார்களாம் தமிழ் வணிகர்கள். அரபு நாட்டில் மட்டும் குதிரைகளை பண்டமாற்றாகப் பெற்றிருக்கிறார்கள் தமிழ் வணிகர்கள்.

எகிப்து நாட்டின் பேரழகி கிளியோபட்ரா தமிழ்நாட்டு முத்துக்களைப் பாலில் ஊற வைத்து குளிப்பாராம். எகிப்து நாட்டு அறிஞன் தாலமி இந்தியா தன்னுடைய நாட்டின் செல்வத்தை ஒப்பனை பொருட்களை கொடுத்து விட்டு அளவில்லாத தங்கத்தைப் பெற்றுச் செல்வதாக புலம்பியதாக எகிப்து வரலாறு தெரிவிக்கிறது. கிளியோபட்ரா தமிழ்மொழி அறிந்திருந்தார் என்றும் தெரிய வருகிறது.

இவ்வாறாக உலகம்- தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம்.

உலகினர் தமிழர் வானியலில், கடல்தொழில் நுட்பத்தில், கப்பல் கட்டுதலில், கடல்கடந்த வணிகத்தில் என்பனவான நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம்.

ஆனாலும் தமிழர்மண் குறித்து 'நாவலந்தேயம்' என்ற அறிமுகம் மட்டுமே உலகினருக்கு இருந்தது.

அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - INDIA என்று பதிவு செய்தனர்.

அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே.

அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு வாசுகோடகாமா இந்தியாவைத் தேடி வந்தடையும் போது- ஆரியர் அராபியர் மகமதியர் எல்லாம் நுழைந்து கலந்து விட்டதால், அவர்கள் வணிகத் தொடர்புக்காகத் தேடிவந்த நாவலINDIAயம் இல்லை. நாகரிகத் தமிழர் இல்லை. 

அவர்கள் தேடி வந்த நாவலந்தேயம் காணக்கிடைக்காதது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இங்கே தூக்கலாக கொண்டாடப்பட்ட சமஸ்கிருதமும் துவண்டு கிடந்த தமிழும் அவர்களைத் துணுக்குற வைத்தது. அவர்கள் தமிழை மீட்க முன்னெடுத்த முயற்சிகளின் தொடர்ச்சியாக பல ஐரோப்பிய அறிஞர்கள் தமிழ் படித்து தமிழே இந்தியாவின் மூலமொழி என்று தமிழர்களுக்கே உணர்த்த வேண்டிய கட்டாயம் அமைந்தது. 

ஐரோப்பிய அறிஞர் பெருமக்கள் ஊட்டிய தமிழுணர்வில் எழுந்த அரசியல் கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற திமுக. சில ஐரோப்பிய அறிஞர்கள் திராவிடம் என்கிற மூலமொழியில் இருந்து தமிழ் உள்ளிட்ட தென்னாட்டு மொழிகள் பிறந்திருக்கக்கூடும் என்கிற நூறு விழுக்காடு பிழையான ஆய்வை முன் வைத்திருந்தனர். 

அவர்கள் இந்தியா வந்த போது, ஆரியர்கள், ஆரியர் அல்லாதவர்களை, தமிழர் என்று குறிக்க, பயன்படுத்தியிருந்த சொல் திராவிடா என்பது ஆகும். அதாவது இங்கீலீஷை தமிழர்கள் ஆங்கிலம் என்றும் வட இந்தியர்கள் அங்கிரேஜி என்றும் புழங்குவதைப் போல- தமிழ் என்ற சொல்லை ஆரியர்கள் த்திரமிட, த்திரமிள் என்று ஒலித்து புழங்கி வந்திருந்தனர்.

திராவிட முன்னேற்றம் என்பது தென்னியந்தியர்கள் அனைவரையும் குறிப்பதற்கான சொல்லாக திமுக முன்னெடுத்தது. காரணம் திமுகவின் தொடக்க காலத்தில் பல தெலுங்கு, மற்றும் கன்னடம் பேசுவோர் கட்சியின் தலைமையில் இருந்திருந்தனர். 

ஆனால் திமுகவிற்கு- தெலுங்கு கன்னட மண்ணோ, தெலுங்கு கன்னட மக்களோ மிகமிகச் சிலராகக் கூட ஆதரவு இன்று வரையிலுமே அளிக்கக் காணோம். திமுகவை தமிழர் முன்னேற்ற இயக்கமாகவே இந்தியாவில் அனைவரும் அடையாளம் அளித்து வருகின்றனர். ஆனால் இன்று வரை திமுக திராவிட மாடல் என்று பேசுகிறதேயன்றி தமிழ்மரபு, தமிழியல், தமிழ்ஆட்சி மாதிரி என்றெல்லாம் பேசாதது தமிழ் மக்களில் பேரளவினருக்கு நெருடலான செய்தியே ஆகும்.

இந்த நிலையில்தாம் நாம் தமிழர்கட்சி பேரளவான தமிழர்களால் அங்கீகரிக்கப்படுவதற்கு காரணம் ஆகிறது. 

திமுகவில் இருந்து பிரிந்து புதிய கட்சியை நிறுவிய எம்ஜியார்- தலைப்பிலும் அடிப்படையிலும் திராவிடத்தை விட்டுவிடவில்லை. வைகோ- தலைப்பிலும் அடிப்படையிலும் திராவிடத்தை விட்டுவிடவில்லை. விஜய்காந்த்- தலைப்பிலும் அடிப்படையிலும் திராவிடத்தை விட்டுவிடவில்லை.

தலைப்பில் திராவிடத்தை விட்டுவிட்ட பாட்டாளி மக்கள் கட்சியோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, தமிழ் அடிப்படையைக் கொண்டாட முனையவில்லை. பார்ப்பனிய ஆதிக்கவாதத்திற்கு முரண்பாடாக முன்னெடுக்கப்பட்ட காரணம் பற்றி, அடிப்படை பார்ப்பனியமாகிற திராவிட அடிப்படையையே கொண்டாடி வருகின்றன.

ஆரியர் தமக்கு சூட்டிய திராவிட என்கிற  தலைப்பையே ஏற்றுக்கொண்டதாலும், ஆரியத்தின் பாகுபாடுகளை எதிர்ப்பதைக் கொள்கையாக்கிக் கொள்கிற நிலையிலும், ஆரியமே திராவிடத்திற்கு அடிப்படை ஆகும். திராவிடம் என்பது ஆரியச்சார்பே ஆகும். திராவிடம் பேசுவதற்கு ஆரியத் தொன்மங்கள் அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் ஆகும்.

திமுகவின் தொடக்க காலத்திலேயே இந்தச் செய்தியை திமுக தலைவர்களுக்கு பல தனித்தமிழ் அறிஞர்கள் தெளிவாக உணர்த்த முயன்று திமுகவால் புறக்கணிக்கபட்டருந்தனர். 

அந்தப் புறக்கணிப்பாளர்களில் ஒருவராக தினத்தந்தி இதழின் ஆசிரியர் சி.பா. ஆதித்தனார் நாம் தமிழர் இயக்கம் என்றவொரு அரசியல் கட்சியை தொடங்கி பிற்காலத்தில் திமுகவில் கரைந்து போனார்.

உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பு தேவநேயப் பாவாணர் தலைமையில் அமைக்கப்பட்டது. பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார். தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பிற மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன.

பாவாணர் காலத்திற்குப் பின் பாவலரேறு பெருஞ்சித்திரனார் உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். தமிழ்நாடு முழுவதும் நிறைய தனித்தமிழ் அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஆனால் தமிழ் கொண்டாடும் எந்த அமைப்பும் அரசியல் கட்சியாக மக்களிடம் களம் இறங்கவில்லை.

திமுகவின் திராவிடம்- அதற்கு தமிழுணர்வை ஊட்டிய ஐரோப்பிய அடிப்டையை பேரளவாகவும், ஆரிய பாகுபாடுகளை எதிர்க்கிற ஆரிய அடிப்படையை சிற்றளவாகவும் முன்னெடுக்கிற பாட்டில் நடப்பு நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவின் திராவிடம்- திமுகவின் தொடர்ச்சியே என்கிற நிலையில்- ஐரோப்பிய அடிப்டையை சிற்றளவாகவும், செயலிலதா தலைமையில் மீட்டுருவாக்கம் பெற்ற நிலையில்- ஆரிய அடிப்படையை பேரளவாகவும், முன்னெடுக்கிற பாட்டில் நடப்பு நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தேமுதிக, பாமக கட்சிகள், அதிமுக அடியொற்றியும், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திமுக அடியொற்றியும் நடப்பு நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தியா விடுதலை பெற்று எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், நேற்று காங்கிரஸ் ஆட்சியிலும், இன்றைக்கு பாஜக ஆட்சியிலும் தொடர்ந்து ஒன்றிய அதிகாரம் ஆரிய அடிப்படையின் அடாவடிகளாலேயே முன்னெடுக்கப்பட்டு வருகிற அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

உலகினர், பேரறிவுச் சோலையாக அறிந்த, நாவலந்தேயத்தை இந்தியா என்று ஒலித்து தேடிவந்தபோது, அவர்கள் தேடி வந்த நாவலந்தேயம் காணக்கிடைக்காதது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இங்கே தூக்கலாக கொண்டாடப்பட்ட சமஸ்கிருதமும் துவண்டு கிடந்த தமிழும் அவர்களைத் துணுக்குற வைத்தது. அவர்கள் தமிழை மீட்க முன்னெடுத்த முயற்சிகளின் தொடர்ச்சி விழலுக்கு இறைத்த நீராகவிட்டதற்கு காரணம்:

நமக்கு கிடைத்த திமுக- தமிழ் அடிப்படையில் தலைப்பைக் கொண்டிருக்கவில்லை. தமிழ் அடிப்படையையும் மீட்டு நிறுவமுயலவில்லை. என்கிற குற்றச்சாட்டு தமிழ்அறிஞர் பெருமக்களால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிற நிலையில்-  

கொள்கைகளை முழங்குவதிலும், தலைப்பிலும், தமிழ் அடிப்படையைக் கொண்டாடும் முதலாவது அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சியை இன்றைக்கு தமிழ்நாடு கண்டிருக்கிறது என்பதால் தமிழ்மக்கள் அதை படிப்படியாக உயர்த்திப் பிடிக்கின்றனர்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,544.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.