Show all

தமிழ்படித்து தமிழுக்கு சாதித்த உலக அறிஞர்கள்! ஆங்கிலம் படித்து ஆங்கிலத்திற்கு எதுவும் சாதிக்க முடியாத தமிழர்கள்

தமிழகம் வந்து தமிழ் கற்றுக் கொண்டு தமிழுக்கும் சாதித்து, தமிழர்களுக்கும் எழுச்சியூட்டிய உலக அறிஞர்கள் வியப்பை அளிக்கிறார்கள். எழுபத்தி இரண்டு ஆண்டுகளாக விழுந்து விழுந்து பல்வேறு கல்வித்திட்டங்களில் ஆங்கிலம் படித்த தமிழர்கள் ஆங்கிலத்திற்கு சாதித்தது ஏதுமில்லை யேன்?

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீகன் பால்கு: கிறித்துவ சமயத் தொண்டாற்ற வந்தவர். தமிழ் மொழியின் இனிமை, தொன்மை, மேன்மை, எளிமை ஆகிய இயல்புகளிலும், தமிழ் இலக்கியம் கண்ட இயற்கைத் தன்மை, அறிவார்ந்த கூர்மை, அன்பு வளர்க்கும் மாண்பு, அறநெறியின் உயிரோட்டம் ஆகியவற்றால் கவரப்பட்டுத் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்வதிலேயே தம் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்தார். தமிழ் மொழியில் சமயம், மருத்துவம், வரலாறு முதலானவற்றில் உள்ள நாற்பதாயிரம் சொற்களைத் தொகுத்து ஒரு மொழி அகராதியை உருவாக்கினார். அவர் தொகுத்த செய்யுள் அகராதியில் பதினேழாயிரம் இலக்கிய வழக்குச் சொற்களும், மரபுத் தொடர்களும் இடம் பெற்றன. நீதிவெண்பா, கொன்றை வேந்தன், உலகநீதி ஆகிய செய்யுள்களை செருமானிய மொழியில் பெயர்த்துள்ளார். ஆசியாக் கண்டம் முழுதும் சுற்றிப் புகழோடு பிரிட்டன் நாட்டிற்குச் சென்றபோது, ஜார்ஜ் மன்னர் தலைமையில், நாட்டின் உயர் மதத் தலைவரான கான்டர்பரி ஆர்ச் பிசப் இலத்தின் மொழியில் வரவேற்புரை நிகழ்த்தினார். அதற்கு சீகன்பால்கு என்னுடைய மறு மொழியை நான் ஒரு மொழியில் பேசப் பேகிறேன் அது இறைவனால் மனிதருக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற செல்வத்துள் முதன்மையானது. அதுவே தமிழ் மொழி எனக் கூறி தமிழின் பெருமையை அவர்கள் உணருமாறு செய்தார்.

கிரன்ட்லர் பாதிரியார்: இவர்செருமனி நாட்டைச் சேர்ந்தவர். அக்காலத்தில் தமிழகத்தில் வழங்கிய மருத்தவ முறையின் தனிச்சிறப்பைப் பற்றி விளக்கும் ஒரு நூலை செருமானிய மொழியில் இயற்றினார். செருமானியப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கத்தக்க சிறப்பு வாய்ந்த மொழி தமிழ் எனவும் கூறினார். இதனால் தமிழரின் அறிவுத் திறன் மேல் நாட்டவரால் ஏற்கப்பட்டது. மேலும் அந்நாட்டைச் சேர்ந்த சார்ல் கிரவுல் என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தமிழிலே உள்ள கைவல்ய நவநீதம், சிவஞான சித்தியார் போன்ற சில தத்துவ நூல்களைச் செருமானியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளையும் இலத்தின், செருமன் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்தார்.

ராபர்ட டி நோபிலி: இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டி நோபிலி என்னும் பாதிரியார் சமயத்தைப் பரப்பத் தமிழகம் வந்து தமிழையும், வடமொழியையும் கற்றுக் கிறித்தவ சமய விளக்கம் செய்யும் உரைநடை நூல்கள் பலவற்றை இயற்றியும் போர்த்துக்கீசிய அகராதி ஒன்றைத் தொகுத்தும் உள்ளார். தத்துவ போதகர் என்னும் பெயருடன் தம்மை இத்தாலிய நாட்டு அடிகளார் எனக் கூறிக் கொண்டார். அதை மக்களிடம் காட்டிக் கொள்ள தலையிலே குடுமி, காலிலே பாதக்குறடு, காது குத்திக் கொண்டு, நெற்றியில் சந்தணப் பொட்டு இட்டு தமிழகத் துறவியைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு தம்மை ஐயர் என்னும் நிலையைக் கொண்டிருந்தார். சமசுகிருதச் சொற்கள் கலவாத தொன்மை இலக்கியங்கள் இருந்தனவென்றும், வடமொழியின் துணையின்றித் தமிழ் இயங்க முடியும் என்பதையும் ஆய்ந்தளித்தார்.

வீரமாமுனிவர்: இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டைன் ஜோசப் பெசுகி தமிழகத்துக்குச் சமயத் தொண்டு புரிய வந்தார். அவர் தமிழுடன் அந்த இனமொழிகளான தெலுங்கும் கன்னடமும் பயின்றதோடு வடமொழியும் கற்றுத் தேர்ந்தார். பின் வீரமாமுனிவர் என்னும் பெயர் கொண்டு தமிழிலே தேம்பாவணி என்னும் காவியத்தைப் படைத்தார். வடசொல் விரவிய மணிப் பிரவாள நடையை அறவே விலக்கித் தனித்தமிழ் உரைநடையைக் கொண்டு வந்தார். எனவே தமிழ் உரைநடையின் தந்தை என இவர் அழைக்கப்பட்டார். தொன்னூல் இலக்கணம் இயற்றி அதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி ஆகிய ஐந்து கூறுகளையும் விளக்கியுள்ளார். சதுரகராதியையும் இயற்றியுள்ளார். தமிழ்எழுத்துச் சீர்திருத்தம் செய்துள்ளார். திருக்குறள் அறத்துப்பாலையும் பொருள்பாலையும் இலத்தினில் மொழியாக்கம் செய்தார்.

டாக்டர் வின்சுலோ: தமிழகம் வந்த அமெரிக்க நாட்டு மொழியறிஞர். அவர் தமிழ் மொழியைக் கற்று அதன் சிறப்பை உணர்ந்து தமிழின் வேர்ச் சொற்களைக் கண்டு, அவற்றின் தனி இயல்பை ஆராய்ந்து காட்டி, தமிழ் ஒரு மூல மொழியாக ஒரு தனிப்பிரிவாகக் கொள்ளப்படவேண்டும் எனவும் வேற்று மொழியின் துணை இன்றித் தனித்து இயங்கும் ஆற்றலுடைய தமிழின் சிறப்பு வியப்பளிப்பதாகவும், சங்க இலக்கியம் தமிழுக்குப் பெருமையளிப்பவையாகும் எனவும், தமிழ் செய்யுள் வடிவிலும், நடையிலும் கிரேக்க மொழிச் செய்யுளைக் காட்டிலும் தெளிவுடையதாகவும், திட்ப, நுட்பமுடையது, கருத்தாழமுடையது எனவும், தமிழ் மொழி நூல் மரபிலும், பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல் வளம் கொண்டது எனவும் கூறிச் சிறப்பித்துள்ளார்.

டாக்டர் கால்டுவெல்: இவர் சமயத் தொண்டு புரியத் தமிழகம் வந்து சேர்ந்தார். இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் ஒப்பற்ற நூலை இயற்றியுள்ளார். வடமொழியின் துணையின்றித் தமிழ் மொழி இயங்காது என்னும் தவறான கொள்கையை உதறி எறியவும், எம்மொழியின் துணையுமின்றித் தனித் தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்னும் உண்மையை உலகுக்கு அறியச் செய்தவர் டாக்டர் கால்டுவெல் ஆவார். இவர் நிகழ்த்திய ஆய்வு நூலே வடமொழி ஆதிக்கத்தால் கேடடைந்த தமிழையும், தமிழறிஞர்களின் எண்ணங்களையும் மாற்றுவதற்குப் பெரிதும் அடிப்படையாகப் பயன்பட்ட நூலாகும். தமிழ்மொழி எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று, தனது தனித்தன்மை காத்து, தன்னை அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்கிறது என்னும் பேருண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர் கால்டுவெல் ஆவார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் நெடுங்காலம் தங்கியிருந்து சமயத் தொண்டு புரிந்தார். இங்கு வாழும் மக்களைப் பற்றித் தமிழ் உரைநடையில் “ஞானக்கோயில்’, “நற்குணத்தியான மாலை’ போன்ற நூல்களை இயற்றினார்.

ஜியுபோப்: இவர் வடஅமெரிக்காவில் உள்ள நோவாஸ் கோஷியா மாநிலத்தைச் சேர்ந்தவர். சமயப் பணிக்காக தமிழகம் வந்தார். இவர் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சமய நூல்கள், நீதி நூல்கள் ஆகியவற்றைப் பயின்றார். சைவ சித்தாந்த நெறி, திராவிட அறிவின் தேர்ந்த தெளிந்த நிலையின் பயன் எனப் பாராட்டியுள்ளார். யாவும் ஆசிரியர்களின் அறிவின் பயன் என்று கருதிக் கிடந்த நாள்களில் அவை தமிழரின் அறிவிலே முகிழ்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்ட அக்கருத்து தமிழின் பெருமையை நிலை நிறுத்தத் துணையாயிற்று. சமசுகிருதத்திற்கு அப்பாற்பட்டுத் தனித்துத் தோன்றியது மட்டுமின்றி அதன் ஆதிக்கத்தை எதிர்த்துத் தனித்து நிற்பதுடன் பரந்து விரிந்த தன்மையும் உள்ளங்கவரும் திறமும் கொண்டது தமிழ் இலக்கியம் எனக் கூறியுள்ளார். இவர் தமது கல்லறையின் மீது இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று செதுக்கி வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். 

கமில்ஸ் சுலபில்: இவர் செக்கோசுலோவாகிய நாட்டைச் சேர்ந்த தமிழாய்ந்த அறிஞர். உலகில் எந்த மொழியின் வரி வடிவத்திலும் காணப்படாத தனிச் சிறப்புகளைத் தமிழ் வரிவடிவத்தில் காணலாம். ஆங்கிலத்தில் அத்தகைய அழகு கிடையாது. தமிழில் ஓர் எழுத்தினை உச்சரிக்கும்போது எழுதுகின்ற ஓசை நயத்திற்கேற்ப அதன் வரிவடிவமும் அமைந்திருக்கும் அதாவது, எழுத்தைக் கூட்டினால் சொல் வருகிற அதிசய மொழி தமிழ் எனக் கூறியுள்ளார்.

இன்னும் மாச்சுமுல்லர், பெர்சிவல் பாதிரியார், டாய்லர் போன்ற மேனாட்டறிஞர்கள் பற்பலர் தமிழைக் கற்றுத் தேர்ந்து தமிழைப் போற்றியுள்ளனர்.

இங்கேதான் தமிழர்களுக்கு ஒரு கேள்வி? இவர்கள் எல்லாம் நேரடியாக தமிழகம் வந்து தமிழ் கற்று தமிழில் இத்தனை சாதித்திருக்கிறார்கள்.

நாமும் இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து, அரசு பள்ளிகளில் மூன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்கிறோம். அந்தக் கல்விமுறையில் நம்மால், ஆங்கிலம் கற்றுத் தேற முடியவில்லை என்று, நமது பிள்ளைகளை பதின்ம பள்ளிகளில் சேர்த்து ஆங்கிலத்திலேயே எல்லாப் பாடங்களையும் படிக்கிற முயற்சியையும் செய்துவிட்டோம். அதுவும் போதாவென்று நடுவண் இடைநிலை கல்விப் பள்ளியில் சேர்த்து ஆங்கிலத்தை பயிற்றுவித்தும் பார்த்தோம். அப்புறம் இன்டர் நேசனல் கல்வித் திட்டம் என்றெல்லாம் கூட ஆங்கிலம் படித்தும் பார்க்கிறோம். 

கடந்த எழுபத்தி இரண்டு ஆண்டுகளாக  மேலே நாம் குறிப்பிட்டுச் சொன்ன உலக அறிஞர்கள் தமிழில் வந்து சாதித்ததைப் போல, இத்தனை வகையான கல்வித் திட்டத்தில், இத்தனை வகையான பள்ளிகளில் படித்த எந்தத் தமிழனாவது உலகத்தில் எந்த மூலையிலாவது ஆங்கிலத்தில் சாதித்ததாக சொல்ல முடியுமா?

நாம் சிந்திக்க வேண்டும்! மேலே குறித்தவர்கள், தங்கள் தங்கள் மொழியைச் செவ்வனே கற்றவர்கள். அவர்களால், தேவையின் காரணமாக நமது மண்ணிற்கே வந்து நமது மொழியைச் சாதிக்கும் அளவிற்கு கற்க முடிந்தது. 

தமிழீழத் தமிழர்கள் உலகளாவி விரவி, ஆங்கிலத்திலும் புலமையுள்ளவர்களாக, அந்த அங்கிலப் புலமையை தமிழ் வளர்ச்சிக்கே பயன் படுத்தியதால்தான் இணையத்தில் இன்று தமிழ் கொடி கட்டி பறக்கிறது. இணையத்தையே ஆள்கிற கூகுள் தேடலின் தலைவர் சுந்தர் பிச்சை பல்வேறு கல்வித் திட்டங்களில் ஆங்கிலம் கற்றுவிட்டு உலகை நோக்கிப் பயணித்தவர் அல்லர். உலகை நோக்கி பயணித்ததால் சாதித்தவர். 

இந்த அழகில் தற்போது மூன்றாவது மொழி ஹிந்தியால் வாழ்க்கையாம்? இத்தனை ஆண்டு ஆங்கிலப் படிப்புக் கல்வியால் தமிழர் சாதித்தது ஒன்றும் இல்லை. ஒரு வேளை சாதித்ததாக காண்பவர்கள் இங்கிருந்து தொழில் நுட்பத்தை, மருத்துவத்தை, கலையை படித்துக் கொண்டு சென்றதால் மட்டுமே சாதித்தவர்கள். 

உலகில் ஆங்கிலம், ஹிந்தி மட்டுமல்ல பல்லாயிரம் மொழிகள் இருக்கின்றன. அந்த மொழிகளையெல்லாம் தமிழ் நாட்டில் இருந்து கற்றுத் தேர்ந்து ஆகப் போவது ஒன்றுமே யில்லை. அந்தந்த நாட்டு மொழிகளை சரளமாகப் பேசத் தெரிந்தவர்களுக்கே அந்தந்த நாட்டுக்காரர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை. எடுத்துக்காட்டு: ஹிந்தி சரளமாகப் பேசத் தெரிந்தவன், தமிழ் நாட்டில் வந்து பானிபூரி விற்கிறான், ஹிந்தி சரளமாகப் பேசத் தெரிந்தவன், கட்ட நல்ல துணியில்லாமல், தின்ன சுவையான உணவு இல்லாமல் ஒண்ட ஒரு குடிசையில்லாமல், தமிழக கட்டுமான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறான். 

அவனின் தாய்நிலம் அவனுக்கு மருத்துவக் கல்வி கொடுத்திருந்தால், அவனுக்கு பொறியியல் கல்வி கொடுத்திருந்தால், அவனுக்கு ஏதாவது கலைக் கல்வி கொடுத்திருந்தால்,  இங்கு வந்து பாடுபட்டுக் கொண்டிருக்க வேண்டிய தேவை இருக்காது. 

உலகில் எங்கும், எந்த மொழிக்கும் அந்த மொழியை தெரிந்திருப்பதற்கான தகுதிக்கு வேலையெல்லாம் கிடையவே கிடையாது. 

தமிழர்களைத் தாய்மொழியைப் படிக்க விடுங்கள். தமிழர்கள் மருத்துவக் கல்வியை பிடுங்க நீட்டைத் திணிக்காதிருங்கள். தமிழர் மண்ணில் உழவை மேற்கொண்டு தன்னிறைவோடு இருக்க, மீத்தேன் ஹைட்ரோகார்பன் என்று மண்ணைப் பிடுங்காதிருங்கள். தமிழக அரசின் வரிவாங்கும் உரிமையை சரக்கு-சேவை வரி என்ற பெயரில் பிடுங்கி தமிழர் தொழில்களை நாசப்படுத்தாதிருங்கள். 

இந்தியாவில் இருக்கிற அத்தனை பேருக்கும் நாங்கள் வேலை தருகிறோம். தமிழகம் வந்து வேலையை ஏற்றுக் கொண்டு அப்புறம் நீங்கள் தமிழ்க் கற்றுக் கொள்ளுங்கள் போதும். இப்போதைக்கு தமிழகத்தில் தமிழே தெரியாமல் உங்களில் பல்லாயிரம் பேர்கள் வேலையில் இருக்கின்றீர்கள் அவர்கள் எல்லாம் முதலில் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,178.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.