Show all

நாம் தமிழர் கட்சி! அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது, தக்க வைத்த வாக்கு வங்கியால்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கிற வாக்கு எண்ணிக்கை அரசியல் பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.

21,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக ஆதரவு காங்கிரசு வேட்பாளர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். இடைத்தேர்தல் கணக்கு அடிப்படையில் இந்த வெற்றி சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.

இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கிற வாக்கு எண்ணிக்கை அரசியல் பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவைக் காட்டிலும் 67,300 வாக்குகள் வேறுபாட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார். 

கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறையும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் நாம் தமிழர் கட்சி, தனது வாக்குவங்கி பெரும் சரிவைக் காணாமல் தக்கவைத்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது. இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேனகா 10,827 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். நாம் தமிழர் கட்சிக்கு இது கடந்த தேர்தலைக் காட்டிலும் சற்று குறைவுதான் என்றாலும், பிற கட்சிகளை ஒப்பிடும்போது இந்தச் சரிவு ஒன்றுமே இல்லை என்றுதான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 64.58 விழுக்காடு வாக்குகளையும், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு 25.75 விழுக்காடு வாக்குகளையும் பெற்றிருக்கும் நிலையில், மற்றவர்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மட்டுமே 6.35 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மற்ற கட்சிகளோ, சுயேச்சைகளோ ஒரு விழுக்காடு வாக்குகளைக்கூட பெறவில்லை. கடந்த தேர்தலில் 11,629 வாக்குகளைப் பெற்று, 7.65 விழுக்காடு வாக்குவங்கியை வைத்திருந்தது நாம் தமிழர் கட்சி. அதை இடைத்தேர்தலிலும் பெரும் சரிவு காணாமல் தக்கவைத்திருப்பது, எளிமையான பாடாற்று அன்று என்கிறார் மூத்த இதழியலாளர் பிரியன். 

சீமானுக்கான ஒரு வாக்கு வங்கி உருவாகியிருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் தெளிவாகக் காட்டுகிறது. மெதுவாக, வலிமையாக, ஆக்கப்பாடான வளர்ச்சியை சீமான் அடைந்துவருகிறார். இந்த வளர்ச்சி மரபுப்பாடாக இருக்கிறது என்பதையும் பார்க்க முடிகிறது. என்று தெரிவிக்கிறார் பிரியன்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் இதைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டியது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரையும் மிக அழுத்தமாக இருந்தது. ஆனால், உடனே ஆட்சியமைக்கும் அளவுக்கு திடீரென வளர்ச்சி வந்துவிடாது. படிப்படியாக அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும். சீமானுடன் இருக்கும் இளைஞர்கள் அதுவரை பொறுமையாக இருப்பார்களா? விரக்தி அடைந்து விடுவார்களா என்பதை யூகிக்க முடியாது. கட்டுக்கோப்பாக சீமான் அதைக் கடத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், வளர்ச்சி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்கிறார் பிரியன்
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,543.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.