Show all

வாழ்க இந்த அரசு ஊழியர்கள்

தமிழக போக்குவரத்து கழகத்தில் உள்ள ஒரு அரசு பேருந்தை தனியார் பேருந்து போல அழகுபடுத்திய ஓட்டுனர், நடத்துனர் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு சிறப்பு பரிசு வழங்கியுள்ளது. பேருந்து அழகாக தோற்றம் மற்றும் தூய்மையுடன் காட்சியளித்ததால் பயணிகள் ஆர்வம் காட்டினர். அதனால் அந்தப் பேருந்தில் வசூல் கூடுதலானது. பொதுவாக மக்கள் தனியார் பேருந்திலேயே பயணிக்கவே இன்றைக்குப் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். முதன்மைக் காரணம் இருக்கை வசதி, சொகுசான பயணத்திற்காகவே கட்டணம் கூடுதல் என்றாலும் பலரும் தனியார் பேருந்தையே விரும்புகின்றனர். தேவகோட்டையில் இருந்து திருப்பூர் இயக்கப்படும் ஒரு அரசு பேருந்தில் பயணிக்கவே பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை முதல் திருப்பூர் வரை இயக்கப்படும் இந்த அரசுப் பேருந்து கடந்த ஓராண்டிற்கு முன்பு வரை, நாளொன்றுக்கு 9,500 ரூபாய் வரை மட்டுமே வருவாய் ஈட்டி வந்தது. தற்போது இத்தொகை 22 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் முருகேசன், பாரதிதாசன், ராஜா, ரங்கராஜ், கண்ணன் எனும் 5 பணியாளர்கள். இவர்களின் முயற்சியால் சாதாரண அரசுப் பேருந்து, பல்வேறு வசதிகளுடன் கூடிய சீர்மிகு பேருந்தாக மாறியுள்ளது. இந்தப் பேருந்தில், அகன்ற திரை கொண்ட 2 எல்.இ.டி தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒலியை துல்லியமாகத் தரும் 8 டிராக் மியூசிக் சிஸ்டம், பேருந்தை சுற்றிலும் வண்ண விளக்குகள், மலர் மாலைகள் என பேருந்து அமர்க்களமாக காட்சியளிக்கிறது. இதற்கான மொத்த செலவையும் இந்த பணியாளர்களே ஏற்றிருக்கிறார்கள். பேருந்து புதுப்பொலிவுடன், சுகமான பயணத்தை அளிப்பதோடு, இதன் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் கனிவுடன் நடந்து கொள்வதாகவும் பயணிகள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே, தனியார் பேருந்துகளில் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் தற்போது இந்த அரசுப் பேருந்தை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளைக் கவரும் வகையில் பேருந்து மாற்றப்பட்டுள்ளதால், வருவாய் அதிகரித்துள்ளதாகக் கூறும் இந்தப் பேருந்தின் ஓட்டுநர் முருகேசன், தங்களின் முயற்சிக்கு மக்கள் ஆதரவு அளித்திருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு தங்களின் உயரதிகாரிகள் முதற்கொண்டு அனைவரும் உறுதுணையாக இருந்ததாகக் கூறுகிறார் ஓட்டுநர் பாரதிதாசன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.