Show all

பீட்டா வெளிநாட்டுக் காளைகள் இனப்பெருக்கத்துக்கு ஆதரவானதா எனும் சந்தேகம்!

பீட்டா வெளிநாட்டுக் காளைகள் இனப்பெருக்கத்துக்கு ஆதரவானதா எனும் சந்தேகம்! ஜல்லிக்கட்டுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் காளை உருவம் கொண்ட ராட்சத பொம்மைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பீட்டா. ஜல்லிக்கட்டுக்கு எதிராக “பீட்டா” அமைப்பினர் தில்லியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆர்வலர்களுடன் தில்லியைச் சேர்ந்த தமிழ் வழக்குரைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பீட்டா குழுவினர், ராட்சத வடிவிலான இரண்டு காளைகளின் உருவம் கொண்ட பொம்மைகளுடன் ஜந்தர் மந்தர் பகுதியில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு ஜந்தர் மந்தரில் நின்றனர். இது குறித்து “பீட்டா” அமைப்பைச் சேர்ந்த நிகுன்ஜ் சர்மா கூறியதாவது: காளைகள் துன்புறுத்தப்படும் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தடை பெற்றுள்ளோம். ஜல்லிக்கட்டு விளையாட்டின் போது காளைகள் அடைத்து வைக்கப்படுகின்றன. அடித்துத் துன்புறுத்தப்படுகின்றன. இந்நிலையில், தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மீண்டும் அனுமதி அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய சுற்றுச்சுழல் மற்றும் வனத் துறை அமைச்சர் முயற்சித்து வருவதாக அறிகிறோம். பசு பாதுகாப்பு குறித்து ஒரு பக்கம் பேசி வருகிறோம். மறு பக்கம் இதுபோன்ற விளையாட்டுகளில் காளைகள் துன்புறப்படுவது குறித்து கவலைபடுவதில்லை. எனவே, காளைகளை கொண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம் என்றார். இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் என்.ராஜாராமன் வந்து பீட்டா குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “ஜல்லிக்கட்டு காளை இனங்களை காப்பற்ற வேண்டும். பீட்டா போன்ற பன்னாட்டு நிறுவனம் வெளிநாட்டுக் காளைகள் இனப்பெருக்கத்துக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜல்லிக்கட்டை எதிர்க்க வேண்டாம் எனவும், அந்த விளையாட்டுக்கு ஆதரவு அளிக்குமாறு பீட்டா அமைப்பினரிடம் கோரினேன். ஜல்லிக்கட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது, அது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த பீட்டா அமைப்புக்கு அனுமதி அளித்திருக்கக் கூடாது என்றும் தில்லி காவல் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன் என்றார் ராஜாராமன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.