Show all

தீபாவளி கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் 818 தீ விபத்துக்கள்

தீபாவளி கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் 818 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 123 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பட்டாசு மற்றும் ராக்கெட் உள்ளிட்ட வெடிகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தில் ஒரு சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தகவலின் அடிப்படையில் தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசால் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சென்னையில் மட்டும் 123 தீ விபத்துகள் ஏற்பட்டது. குறிப்பாக அதிகளவு தென் சென்னையில் மட்டும் 41 தீ விபத்துகள் ஏற்பட்டன. இந்த விபத்துகளில் 90 சதவீதம் ராக்கெட் மற்றும் வான வெடிகளில் ஏற்பட்டன. இதே போல், தமிழகம் முழுவதும் பட்டாசுகளால் மொத்தம் 818 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தீ விபத்துக்கள் மூலம் சென்னையில் மட்டும் மொத்தம் 14 பேர் சிறு மற்றும் பெரும் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். உள் நோயாளிகளாக 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணில் பட்டாசு பட்டு ஒருவர் எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எழும்பூரில் உள்ள பழைய ஆணையாளர் அலுவலகத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் காவலர் குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் பழைய ஆணையாளர் அலுவலக வளாகத்தில் சிலர் பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்போது பட்டாசில் இருந்து தீப் பொறி ஒன்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இந்த விபத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே அருகில் இருந்த கார் மீது பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து காரில் இருந்த தீயை அனைத்தனர். விரைந்து செயல்பட்டதால் மற்ற வாகனங்களில் தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் சிறிது நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.