Show all

செய்தியாக வாசிப்போம், தோதாக மறப்போம், வரலாற்றில் பதியமாட்டோம்! பழநி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான நாணயங்கள் கண்டெடுப்பு

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழநி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராஜராஜ சோழன் கால அரிய வகை நாணயங்கள் கிடைத்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே போடுவார்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது வீட்டை தூய்மை செய்த போது, சில பழைய நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை தொல்லியல் ஆர்வலர் கதிரவனிடம் காட்டியுள்ளார். பின்னர் அந்த நாணயங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் நந்திவர்மன், ராஜேஸ்வரி, ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்த நாணயங்கள் குறித்து நந்திவர்மன் கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நாணயங்கள் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவை. தஞ்சையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சோழ அரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் ராஜராஜ சோழன். சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு பின் அருள்மொழி வர்மர் என்ற பெயருடன், அவர் ஆட்சி பொறுப்பேற்றார்.

ராணுவம், ஆட்சி அமைப்பு, இலக்கியம், நுண்கலை போன்றவை மிகப் பெரிய வளர்ச்சியடைந்ததால், தமிழக வரலாற்றின் பொற்காலம் என இவரது ஆட்சிக் காலம் வரலாற்று ஆசிரியர்களால் புகழப்படுகிறது. 

இவர் ஆட்சி காலத்தில் இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். அந்த வெற்றியை நினைவுகூறும் வகையில் இந்த நாணயங்களை வெளியிட்டுள்ளார். 1.5 செமீ விட்டமும் 0.5 மிமீ தடிமனும் கொண்ட இந்த நாணயங்கள் ஒழுங்கற்ற வட்ட வடிவம் கொண்டுள்ளது. நாணயத்தின் ஒருபக்கத்தில் போர் வீரர்கள் வேலுடன் இருப்பது போலவும், மறுபக்கம் ராஜராஜ சோழனின் முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டவை. இதே போல தங்க நாணயங்களும் அவரது காலத்தில் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் அவை இதுவரை கிடைக்கவில்லை. தங்க நாணயங்களை மக்கள் ஆபரணங்களுக்காக அழித்திருக்கலாம். வணிகத்திற்காக நாணயங்களை தமிழர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர் என்பது நாகரீகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளதை காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது போன்ற வரலாற்று ஆவணங்கள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக புதிது புதிதாக கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது தமிழகத்தில். அது அப்போதைக்கு செய்தியாக வாசிக்கப் பட்டு மறக்கப் பட்டு விடுகிறது. 

வட இந்தியாவில் இதுபோன்ற புதிய புதிய ஆவணங்கள் கிடைக்காத நிலையில், தூசுதட்டப் படாமல் கஜனிமுகமது வெல்லெஸ்லி பிரபு என்று வரலாறு தேய்ந்து போன கீறல் விழுந்த இசைத்தட்டாகவே- கஜனிமுகமது கஜனிமுகமது கஜனிமுகமது கஜனிமுகமது என்றே வாசிக்கப் பட்டே வருகிறது. தமிழகத்திலும் தமிழர் அடிப்படைகளை மீட்டு நிறுவுவதற்கான உணர்வுள்ள அரசு ஏதும் இதுவரை அமையவேயில்லை.

செய்தியாக வாசிப்போம், தோதாக மறப்போம், வரலாற்றில் பதியமாட்டோம்! பழநி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான நாணயங்கள் கண்டெடுப்பை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.