Show all

ஆழ்ந்த இரங்கல்! தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் காலமானார்

திருநெல்வேலி நகர அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன், இன்று உடல்நலக் குறைவு மற்றும் அகவை முதிர்வின் காரணமாக காலமானார். 

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பேரறிமுக இலக்கிய பேச்சாளர், எழுபத்தியேழு அகவை, தமிழ்க்கடல். நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பேரறிமுகர், நெல்லை கண்ணன், தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், மெய்யியல் சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், திருநெல்வேலி நகர அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று  உடல்நலக் குறைவு மற்றும் அகவை முதிர்வின் காரணமாக காலமானார். 

சிறந்த பேச்சாளரான நெல்லை கண்ணன், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றிவர். தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதை அண்மையில் பெற்றிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முஸ்லிம் அமைப்பு மாநாட்டில் பேசிய அவர், தலைமைஅமைச்சர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்சா குறித்த சர்ச்சை கருத்தை பேசியதற்காக சிறை சென்றிருக்கிறார்.

பேரறிமுக இலக்கிய பேச்சாளர், தமிழ்க்கடல். நெல்லை கண்ணன் அவர்களின் மறைவிற்கு பேரறிமுகங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இல்லத்திற்கு வந்தும், அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பேரறிமுகங்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,344.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.