Show all

பாஜக கொள்கை வளையத்திற்குள் வரும் சீமான்! இலவச எதிர்ப்பில்

நூறு நாள் வேலைத்திட்டத்தில் செலவிடும் பணம் வீணாகிப்போவதாக புலம்பித் தள்ளிய சீமான், தற்போது இலவச எதிர்ப்பு என்கிற மக்கள் விரோதக் கருத்தில் பாஜகவுடன் கைகோர்த்து இருப்பது தமிழியல் பேசும் சீமானுக்கு அழகல்ல என்று நாம் எச்சரிக்க விரும்புகிறோம்.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அண்மையில் உத்தரப் பிரதேசம் சென்ற தலைமைஅமைச்சர் மோடி, இலவசங்களால் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தக் கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவசத் திட்டக் கலாச்சாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்று பேசி இருந்தார்.

பயனாளிகளை, பயன்தரும் திட்டத்திற்கு எதிராக ஒருங்கிணைக்க கருத்துப்பரப்புதல் முன்னெடுக்கும், உலகத்தின் ஒரே கட்சி பாஜக மட்டுமே. மக்களுக்கு சுமையான வரியை, ஏதோ மலர்க்கொத்து கொடுப்பது மாதிரி, பிறந்தநாள் அணிச்சல் (கேக்) கொடுப்பது மாதிரி, நள்ளிரவில் சரக்கு சேவைவரியை அறிவித்த கட்சிதானே பாஜக.

மோடியின் இந்த மக்கள் விரோதப் பேச்சைத் தொடர்ந்து, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவரால், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்களுக்கான வாக்குறுதி அளிப்பதை தடை செய்யக் கோரியும், இலவசங்கள் வழங்க கூடாது என உத்தரவிடக் கோரியும், இலவசங்கள் அறிவிக்கிற கட்சிகளின் பதிவுகளை களைவு செய்யக் கோரியும் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டது. 

இலவசங்களை வழங்கக் கூடாது என கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது என்றும், இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவுகளையும் களைவு செய்ய முடியாது எனவும், உச்சஅறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த வழக்கை உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நாளது 18,ஆடி அன்று விசாரித்தது.

இந்த விசாரணையின் போது, இலவசங்களை வழங்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள், இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தங்களது கருத்துகளை ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஒரு மனுவைத் பதிகை செய்தது.

உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஆம் ஆத்மி பதிகை செய்த மனுவில், இலவசங்கள் என்பது ஏழைகளுக்கு உதவக் கூடியது. ஆகையால்தான் இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இதனை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய நிலை வந்திருப்பது வருத்தம் தருகிறது. இது தொடர்பாக குழு அமைத்தால் மாநில அரசுகள், அரசியல் கட்சிகளின் பேராளர்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. இதனிடையே இந்த வழக்கில் தங்களையும் எதிர் மனுதாரராக சேர்க்கக்கோரி திமுக சார்பில் மனு பதிகை செய்துள்ளது. 

இந்த நிலையில், இலவச எதிர்ப்பில், பாஜக கொள்கை வளையத்திற்குள் வந்திருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா. இலவசம் கொடுப்பதால் இழக்கும் பணத்தினை எங்கிருந்து மீண்டும் பெறுகிறீர்கள். ஒன்றிய அரசு ரூ.100 லட்சம் கோடிக்கு மேல் கடனில் உள்ளது. மாநில அரசு ரூ.6.5 லட்சம் கோடிக்கு மேல் கடனில் உள்ளது. 

என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம் தான். இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம் தான். இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது என்றெல்லாம், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது முழங்கியிருக்கிறார் சீமான்.

சீமானில் தமிழியல் சார்ந்த தொண்டுகளுக்கு தமிழ்மக்கள் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் மதிப்பெண்; கொடுத்து வருகின்றனர் என்பது மறுக்;க முடியாத உண்மை.  

ஆனால், நூறு நாள் வேலைத்திட்டத்தில் செலவிடும் பணம் வீணாகிப்போவதாக புலம்பித் தள்ளிய சீமானுக்கு தமிழ்மக்கள் கழித்தல் (மைனஸ்) மதிப்பெண் வழங்க வேண்டி வந்தது. 

தற்போது இரண்டாவதாக இந்த இலவச எதிர்ப்பு என்கிற மக்கள் விரோதக் கருத்தில் பாஜகவுடன் கைகோர்த்து இருப்பது தமிழியல் பேசும் சீமானுக்கு அழகல்ல் இதுவும் உங்களுக்கு தமிழ்மக்களிடம் இருந்து மதிப்பெண் கழிப்புக்கு உள்ளாகும் முன்னேடுப்பே என்று நாம் எச்சரிக்க விரும்புகிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,345.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.