Show all

செயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தான் பொருத்தமானது! மக்கள் கருத்தறிந்து, சென்னை ஆட்சியர் அறிவிப்பு

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தான் பொருத்தமானது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது: சமூகத் தாக்கம் குறித்து கலந்துரையாடிய போது, தெரிவிக்கப் பட்ட கருத்துகள், ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டன. அவைகளை ஆய்வு செய்து கேட்புத்துறை மற்றும் சமூக தாக்க மதிப்பீடு முகமையும் தங்களது பரிந்துரைகளை அளித்தன. இந்தப் பரிந்துரைகளை பரிசீலித்து சென்னை மாவட்ட ஆட்சியர் இறுதி செய்து வெளியிட்ட உத்தரவில்.

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மறைந்த முதல்-அமைச்சர் செயலலிதாவின் சாதனைகளை விளக்கும் விதமாகவும், அவரை பெருமைப்படுத்தும் விதமாகவும் அவர் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்தது. 10 கிரவுண்டு 322 சதுரஅடி பரப்பளவு உள்ள அந்த வீட்டை கையகப்படுத்தி அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.

டாக்டர் ஏனோக் தலைமையிலான குழு போயஸ் தோட்ட பகுதியில் குடியிருப்பவர்களுடன் சமூகத் தாக்கம் குறித்து கலந்துரையாடியது. அவர்கள் தெரிவித்த கருத்துகள், ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டன. அவைகளை ஆய்வு செய்து கேட்புத்துறை மற்றும் சமூக தாக்க மதிப்பீடு முகமையும் தங்களது பரிந்துரைகளை அளித்தன. இந்த பரிந்துரைகளை பரிசீலித்து சென்னை மாவட்ட ஆட்சியர் இறுதி செய்து வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

ஜெயலலிதாவின் வாரிசு தாரர்களாக தங்களை அறிவிக்க வேண்டும் என தீபா, தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நில எடுப்புக்கான இழப்பீட்டுத் தொகை அறங்கூற்றமன்றத்தில் செலுத்தப்படும். வேதா நிலையத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும்.

டி.எம்.எஸ். மற்றும் செம்மொழிப் பூங்கா வளாகங்களில் உள்ள காலி இடங்களை வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தலாம். செம்மொழி பூங்காவில் உள்ள காலி இடத்தில் 30 பேருந்துகளும், 60 சிற்றுந்துகளையும் நிறுத்துவதற்கு இடவசதி உள்ளது. டி.எம்.எஸ். வளாகத்தில் 60 சிற்றுந்துகள் வரை நிறுத்துவதற்கு போதிய இடவசதி உள்ளது.

ஆளுநர் மாளிகை போல போயஸ் தோட்டத்திலும் இயங்கலை மூலம் பார்வையாளர்களை பதிவு செய்து அனுமதிப்பதால் போக்குவரத்து நெரிசலை எளிதாக சமாளிக்கலாம்.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு முன்மாதிரியான தலைவராகவும், ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக ஜெயலலிதா திகழ்வதால், அவர் வாழ்ந்து மறைந்த வேதா நிலையத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது தான் முற்றிலும் பொருத்தமான நடவடிக்கை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,244.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.