Show all

ஜாக்டோ ஜியோ போராட்டம் பிசுபிசுத்தது! 9 நாட்களுக்கு பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது; மூன்று காரணங்கள்

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் 9 நாட்களுக்கு பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், பள்ளிகளில் கல்வி பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு அரசு தயாரில்லை போராட்ட குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு தரப்பு புறந்தள்ளி விட்டது. ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் பரிசீலிக்க முடியாதவையாக உள்ளன என்பதால் இதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துவிட்டார். 

மேலும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது தற்காலிக பணி நீக்க நடவடிக்கை, போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை என பல்வேறு நடவடிக்கைகளும் அரசுத் தரப்பிலிருந்து பாய்ந்தன. 

இந்த நிலையில் போராட்டம் நடத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியது. நேற்று 95 விழுக்காடு ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பிவிட்டதாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்தது. சென்னையில் சுமார் 100 விழுக்காடு ஆசிரியர்களும் பணிக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் போராட்டத்;தை, குறிப்பாக அரசு பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை தமிழ்மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஒரு நல்ல ஆசிரியருக்குப் பிரச்சனை என்றால் மாணவர்களும் மக்களும் போராடி பல சமயங்களில் தீர்வை பெற்றுத் தந்திருக்கின்றனர். 

ஆனால், மாணவர்களின் நீட் போன்ற பிரச்சனைகள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கோபத்தையே உண்டாக்குவதில்லை. தான், தன் குடும்பம், தனக்கான சம்பள உயர்வு என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறுகிய வட்டத்தில் இயங்குவது தமிழ்மக்களிடம் வெறுப்பைச் சம்பாதிப்பதற்கான காரணிகளாகும். 

அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்து ஒரு பக்கம் என்றால், போராட்டத்தை கைவிடுங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை மற்றொரு பக்கம், மக்கள் வெறுப்பு மற்றும் மக்கள் ஒத்துழைப்பின்மை என்பன இந்த போராட்டத்தை கைவிடுவதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,049.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.