Show all

தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக உள்ளதா! குழப்பாமல் விளக்கம் அளிக்கவும்: அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் உட்பட சிலர் மதுரை உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக பேசிய மைக்கேல் ஜீனியஸ், சந்தோஸ் ராஜா ஆகியோர் தாக்கப்பட்டது குறித்தும் இதில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை பதிகை செய்யும்படி மதுரை அறங்கூற்றுமன்றம் சென்ற கிழமை கூறி இருந்தது.

இதையடுத்து தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் இதில் காவல்துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை பதிகை செய்து இருந்தார். தமிழக அரசு இதில் நடுநிலையாக உள்ளது என்று அவர் அதில் கூறி இருந்தார்.

இதையடுத்து தமிழக அரசுக்கு மதுரை அறங்கூற்றுமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. அதில், ஸ்டெர்லைட்டை திறக்கக்கூடாது என்று கூறினால் குற்றமா? ஸ்டெர்லைட்டிற்கு எதிராக பேசினாலே நடவடிக்கை எடுப்பது ஏன்? ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது ஏன்? ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக பேசுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறதா. மக்களை தூத்துக்குடி காவல்துறை கைது செய்வது ஏன். ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதா? துப்பாக்கி சூடு வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை விசாரிப்பதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது ஏன்? அரசின் நிலைப்பாடு சரியாக தெரியவில்லை! ஸ்டெர்லைட் பிரச்சனையில் அரசின் நிலைப்பாடு குழப்பமாக உள்ளது! இதுகுறித்து அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். என்று அறங்கூற்று மன்றம் கூறியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,049.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.