Show all

சென்னை விமான நிலைய சுங்கதுறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னை விமான நிலையத்தில் சுங்கதுறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணி அளவில், 4 ஜீப்களில் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்துக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒவ்வொரு மாதமும் பிடிபடும் கடத்தல் தங்கத்தின் அளவு எவ்வளவு? என்று கேட்டறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அதற்கான கணக்குகளையும் சரிபார்த்தனர். இன்று காலை 7 மணி வரையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 7 மணி நேரம் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது சேகரிக்கப்பட்ட விவரங்கள் என்ன என்பது பற்றி தகவல் களை சி.பி.ஐ. அதிகாரிகள் உடனடியாக வெளியிட வில்லை.

சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வருகை தருபவர்களில் பலர், பல்வேறு வழிகளில் நூதன முறையில் தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும்,அவர்களின் உடைமைகளையும், கடுமையாக சோதனை செய்யும் அதிகாரிகள், அடிக்கடி கடத்தல் தங்கத்தையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். இப்படி விமான நிலையத்தில் பிடிபடும் தங்கத்துக்கு சுங்கத்துறை அதிகாரிகள் முறையாக கணக்கு காட்டுவதில்லை என்றும், தங்கத்துக்கான வரியை விதிப்பதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாகவும்  சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.