Show all

நாள் ஒன்றிற்கு 8 மணி நேரத்திற்கு மேல் வாடகை வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: தமிழக அரசு

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 நாள் ஒன்றிற்கு 8 மணி நேரத்திற்கு மேல் வாடகை வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநில சாலைப்பாதுகாப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் குறித்து புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் 90 விழுக்காடு சாலை விபத்துகள் நீண்ட நேரம் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்ளுக்கு உண்டாகும் களைப்பு மற்றும் மன உளைச்சல்களால் ஏற்படுவதாக தெரிகிறது.

 

இதனை குறைக்க சட்ட வரையறைகளை கடைப்பிடிக்குமாறு தகுந்த அறிவுரைகள் சாலைப் பாதுகாப்பு ஆணையரால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஒரு நாளுக்கு 8 மணி நேரத்திற்கு மிகாமலும், ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகாமலும் மற்றும் வாரத்துக்கு ஒரு நாள் ஓய்வுடன் வாகனங்களை இயக்குதல் வேண்டும்.

சுற்றுலா வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் ஒரு பணி முடித்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த பணி செய்ய வலியுறுத்தக் கூடாது.

ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை மற்றும் தனி நபர் விபத்துக் காப்பீடு அவசியம் வைத்திருத்தல் வேண்டும். சட்டவிதிகளை மீறும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை தாற்காலிகமாகத் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சட்டவிதிகளை மீறும் வாகனத்தின் அனுமதிச் சீட்டு மற்றும் தகுதிச்சான்றுகள் போக்குவரத்துத் துறையினரால் புதுப்பிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் பொருட்டு சட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லது! ஆடத் தெரியாதவளுக்கு மேடை கோணல் என்றால் எப்படி? சாலையையும் கொஞ்சம் சீரமைக்கலாமே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,629

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.