Show all

இராமதாசு கோரும் ‘தமிழகத்தில் லோக் ஆயுக்தா’ ஊழலை ஒழிக்க உதவுமா! வளர்க்க உதவுமா!

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா, சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக அரசுத்துறைகளில் ஊழலும், லஞ்சமும் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சென்னை உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் கிருபாகரன், ஊழல் அதிகாரிகளை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். நேர்மையான அதிகாரிகள் பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதைப் போலவே, தவறு செய்யும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஊழல் செய்யும் அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு முன் அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கெல்லாம் மேலாக ஊழல் ஒழிப்பு கீழிருந்து மேலாக செல்வதற்கு பதிலாக மேலிருந்து, அதாவது முதல்வர், அமைச்சர்கள் நிலையிலிருந்து கீழ்நோக்கி, அதாவது அதிகாரிகளை நோக்கி பயணிக்க வேண்டும். ஆட்சித் தலைமை தூய்மையாக இருந்தால் அதிகாரிகள் மத்தியில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை. ஓமந்தூரார், காமராஜர் ஆட்சி அரசு நிர்வாகத்தில் ஊழல் இல்லை. அதற்குக் காரணம் ஓமந்தூராரும், காமராஜரும் நேர்மையாக இருந்ததால்தான் அவர்கள் ஆட்சியும் ஊழல் கறைபடியாததாக இருந்தது.

அண்ணாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்களுக்கென வருவாய் ஈட்டிக்கொள்ள அரசு நிர்வாகத்தில் ஊழல் விதையை விதைத்தனர். ஆட்சியாளர்களைப் போலவே அதிகாரிகளும் ஊழலை வளர்த்தெடுத்தனர். அதன் விளைவாக இப்போது ஊழல் பெரும் காடாக பரந்து விரிந்திருக்கிறது. இன்றைய நிலையில் அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான ஒரே வழி லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்துவதும்தான்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 20 மாதங்களாகியும் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக ஆட்சியாளர்களுக்கு இருந்தால் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவையும், பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வடிவையும் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் நண்டு கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதனால் அதை விளக்கத் தேவையில்லை. இராமதாஸ், தான்ஒரு தமிழ்நண்டு என்பதை இந்தக் கருத்தால் தன்னை அடையாளப் படுத்திக்;; கொண்டிருக்கிறார்.

தமிழக ஆட்சியாளர்களுக்காக எந்தச் சட்டம் கொண்டு வந்தாலும் அதை நடுவண் அரசுதாம் செயல் படுத்தும். தற்போதே தமிழக அரசு ஒரு கிராமப் பஞ்சாயத்தாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நண்டு இராமதாஸ் சொல்லுவது போல் ‘தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வந்தால், தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து ஹிந்தி ஹிந்துத்துவா வெறி பிடித்த நடுவண் அரசில் ஆளும் காங்கிரசு பாஜக கட்சிகளுக்கு சோரம் போவதற்கு போட்டி போடும் நிலையே உருவாகும்.

நடுவண் அரசை ஆளும் கட்சிகளுக்கு சோரம் போகும் திமுக அதிமுக இடையிலான போட்டியால் தாம், அதிமுகவில்- திமுகவால் செயலலிதாவையும்,

திமுகவில்- செயலலிதாவால் வீரபாண்டிஆறுமுகத்தையும்; இழந்தோம். இன்றைக்கு ஆகாவழி ஆட்சிக்கும், ‘நடுவண் அரசை ஆளும் கட்சிகளுக்கு சோரம் போகும் தமிழ்நண்டுகள் போட்டி நடவடிக்கை தாம் காரணம்.

இந்தியாவிலேயே ஆளுகிறவர்களின் ஊழல் குறைந்த மாநிலம் தமிழகம்தான். ‘நடுவண் அரசை ஆளும் கட்சிகளுக்கு, சோரம் போகும் தமிழ்நண்டுகளின் போட்டி நடவடிக்கை காரணமாகவேதாம், இந்தியாவிலேயே மிகுந்த ஊழல் பேர்வழிகள் தமிழகத்தை ஆளுகிறவர்கள்தாம் என்று இழிவு படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதுதாம் உண்மை.

நடுவண் அரசிலும் சரி, இந்தியாவில் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் சரி ஆண்டவர்களும்- ஆளுகிறவர்களும் வெறுமனே தங்களுக்குள் பகை இருப்பது போல் காட்டிக் கொள்கிற கூட்டுக் களவாணிகள் தாம்.

இராமதாஸ் சொல்லுகிற சட்டங்கள் எல்லாம் நடுவண் அரசுக்குதாம் தேவை. அப்போதுதாம் அங்கே மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சிக்கு வழி பிறக்கும். காங்கிரசும், பாஜகவும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக் கொள்ளாத கூட்டுக் களவாணிகள். அவர்களுக்குள் சண்டை வரவேண்டும் அப்போதுதாம் மாநிலக் கட்சிகள் விடுதலை பெறும். மாநில உடைமைகள், உரிமைகள் பாதுகாக்கப்படும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,629

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.