Show all

இந்தியாவிற்கு சொந்தமாயிருந்து இலங்கைக்கு வழங்கப் பட்ட கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழ

இந்தியாவிற்கு சொந்தமாயிருந்து இலங்கைக்கு வழங்கப் பட்ட கச்சத்தீவு.

இங்கு புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முதல் நாளை (21-ந்தேதி) வரை நடைபெறுகிறது.

இந்தியாவிற்குச் சொந்தமாயிருந்த போது இந்த விழாவில் ஏராளமான இந்தியர் எளிமையாகக் கலந்து சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.

     இந்தத் திருவிழாவிற்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல பதிவு செய்திருந்த பக்தர்கள் அனைவரும் நேற்று காலை ராமேசுவரம் துறைமுகத்துக்கு வந்தனர். அங்கு காவல்துறையினர், சுங்க இலாகா அதிகாரிகள், துறைமுகப் பதிவு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், புலனாய்வு துறையினர் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் பக்தர்களையும், அவர்கள் உடைமைகளையும் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக படகில் ஏற அனுமதிக்கப்பட்டனர். உயிர்ப்பாதுகாப்பு கவசம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

 

காலை 7 மணிமுதல் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து படகுகள் கச்சத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்றன. மதியம் வரை 3,252 பேர் பயணமானார்கள். மீதம் உள்ளவர்கள் வரவில்லை.

 

பக்தர்கள் அனைவரும் கச்சத்தீவை அடைந்தவுடன் மாலை 5 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அந்தோணியார் திருஉருவம் பதித்த கொடியை இலங்கை நெடுந்தீவு பங்குத் தந்தை ஏற்றிவைத்து திருவிழாவை தொடங்கிவைத்தார்.

 

தொடர்ந்து ஆலயத்தை சுற்றி 12-க்கும் மேற்பட்ட இடங்களில் இருநாட்டு பங்கு தந்தைகள் மற்றும் மக்கள் கலந்துகொண்ட சிலுவைப்பாதை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேரை இருநாட்டு மக்களும் சேர்ந்து சுமந்தபடி ஆலயத்தை சுற்றி பவனி வந்தனர். அதன்பின் இருநாட்டு மக்களும் ஒருவரையொருவர் சந்தித்து பேசி உறவுமுறைகளைப் பரிமாறிக்கொண்டனர்.

 

விழாவின் 2-வது நாளான இன்று (21-ந்தேதி) காலை 7 மணிக்கு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெறுகிறது. 9 மணிவரை நடைபெறும் திருப்பலி முடிந்தபின் ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

 

கச்சத்தீவு திருவிழாவையொட்டி ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி வரை கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்துக்கப்பல்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.