Show all

தொண்டர்களிடம் கருத்து கேட்டு, பின் கூட்டணி குறித்து அறிவிப்பதாக விஜயகாந்த்

இரண்டு நாளில் நடைபெற உள்ள நேர்காணலின்போது தொண்டர்களிடம் கருத்து கேட்டு, பின் கூட்டணி குறித்து அறிவிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். காஞ்சிபுரம் அடுத்த வேடலில் தேமுதிக மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டில், தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை வெளியிட்ட பின், கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:  காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும், ஆட்சி மலரும் என்பது தான் மாநாட்டு தாரக மந்திரம். காஞ்சி குலுங்கி விட்டது. அடுத்து காலம் கனிவதும், ஆட்சி மலர்வதும் தான். நான் இந்த மாநாட்டிற்கு காரில் வரும்போது சாலை ஓரத்தில் அமர்ந்து தொண்டர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவைச் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

 

எதற்காக? விஜயகாந்த் பேச்சை கேட்க வேண்டும் என்பதற்காகத்தான். இதை பார்க்கும்போது என்மனம் எங்கோ பறந்து சென்று விட்டது. அவர்கள் ஆடிக்கொண்டு வருவதைப் பார்த்து எனக்கே ஆட வேண்டும் என்று தோன்றியது. தலைவர் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை தொண்டர்கள் வழியில் தலைவன். எனக்கு பணம், காசு சம்பாதிக்கும் ஆசை கிடையாது. ஒரு வேளைக்கு பழைய சோறு, வெங்காயம் கொடுத்தால் போதும். என் ஒவ்வொரு தொண்டனும் எனக்கு சாப்பாடு போடுவான்.

 

  எப்போதும் முன்கூட்டியே தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார். இப்போது ஏன் வெளியிடவில்லை. எல்லாம் பயம். தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்றார். இப்போது காஞ்சிபுரத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து அவருக்கு கண்கட்டி இருக்கும். ஆட்சியில் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டதாக ஆணவத்துடன் நடந்து கொள்கிறீர்கள். ஏன் கடந்த ஆட்சியில் நடந்த எல்லா இடைத்தேர்தலிலும் தோற்றுப்போனீர்கள். போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் தோற்று போனீர்கள். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இதற்கு பதில் சொல்ல வேண்டும். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து ஜீரோ என்றீர்களே. நீங்கள் தான் ஜீரோ.

 

 கடந்த காலகட்டங்களில் 40 லோக்சபா தொகுதிகளிலும் தோற்றீர்களே. அப்போது, நீங்கள் ஜீரோ தானே. ஓ.பன்னீர் செல்வம் இருக்கும் வரை கட்சி உருப்படாது. ஓ என்றால் ஜீரோ பன்னீர்செல்வம் தான்.  இந்த ஆட்சியில் எதிலும் கொள்ளையடிக்கின்றனர். சாலைப் பாதுகாப்பு வார விழா என ஒன்று கொண்டாடினார்கள். எந்த ஊரிலும் சாலையே சரியில்லை. அப்போது எப்படி சாலை பாதுகாப்பு கிடைக்கும். 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளார். முன்னாடியே இத்திட்டத்தை அறிவிக்காமல், எதற்காக கடைசி நேரத்தில் அறிவித்துள்ளீர்கள். நிறைவேற்றாமல் போய்விடலாம் என்பதற்காக தானே. ஆட்சி முடியும் தருவாயில் நல்லது செய்வது போல் நாடகம் செய்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

 

  திராணி இருந்தால் சங்கரன்கோவில் தொகுதியில் நில்லுங்கள் என்று ஜெயலலிதா சவால் விட்டார். நாங்கள் நின்றோமே. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. 8 ஆயிரம் கோடி உடன் குடி திட்ட பணிகளுக்கு 4 ஆயிரம் கோடி பணம் கமிஷன் அடிக்க திட்டமிட்டுள்ளார். ஊழல் செய்கிற கை எப்படி சும்மா இருக்க முடியும்.  சட்டசபையில் ஜெயலலிதா எது பேசினாலும், டேபிளை தட்டுகின்றனர். எதற்கு தட்டுகிறோம் என்று தெரியாமலேயே சிலர் தட்டுகின்றனர்.  சினிமாவில் மட்டும்தான் எனக்கு நடிக்க தெரியும். எனக்கு மக்களிடம் நடிக்கத் தெரியாது. விஜயகாந்த் கூட்டணி வைக்க ரேட்டை கூட்டுகிறார், இதற்காக மவுனமாக இருக்கின்றார் என்று சிலர் கூறுகின்றனர். பணத்திற்காக தொண்டர்களை அடகு வைக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

 

நான் என்ன சொன்னாலும் என் தொண்டர்கள் செய்வார்கள். அதற்கு விஜயகாந்த் தொண்டன் குடும்பத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைதான் காரணம். விஜயகாந்த் ஏழை மக்களுக்காக வாழ்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். ஜெயலலிதா நின்றால், நடந்தால் கூட சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றனர். அவரை விமர்சிக்க தயங்குகின்றனர். இவர்கள், எத்தனை பேர் சப்போர்ட் செய்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் படாத பாடுபடுவர். 2 நாளில் தேமுதிகவில் போட்டியிட விரும்புபவர்கள் நேர்காணல் நடக்கிறது. அப்போது அவர்களுடன் கருத்து கேட்கவுள்ளேன். அதன் பிறகு மாவட்டச் செயலாளர்களுடன் பேசி, எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன்.

 

தலைவர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தொண்டர்கள் நன்றாக இருக்க வேண்டும். விஜயகாந்த் வந்தான் என்றால் ஏழை மக்களுக்காக வந்தான் என்றுதான் இருக்க வேண்டும். ஜெயலலிதாவைப் பற்றி பத்திரிகைகள் சொல்ல பயப்படுகின்றன. ஏனென்றால் ஜெயலலிதா அடித்து விடுவார். போலீசை வைத்து ஜெயலலிதா எல்லாரையும் பயமுறுத்துறாங்க. பத்திரிகைகளை மிரட்டுறாங்க. அவங்களுக்கு ஜால்ரா அடிக்க நிறைய பத்திரிகைகள் இருக்கின்றன. எங்களுக்கு இல்லை.

 

ஆட்சி முடியப் போகிற இந்த நேரத்தில் மக்களுக்கு பண்ணுகிறேன் என்கிறார்கள். இந்த 2 மாதத்தில் எந்த திட்டத்தையாவது நிறைவேற்ற முடியுமா? எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குறாங்க. நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளிடம் இரண்டு கிலோவுக்கு ரூ.10 வீதம் லஞ்சம் கேட்கிறார்கள். சரியா கணக்கு போடனும்னா குமாரசாமியிடம் தான் கேட்க வேண்டும். நாம் 4ம் 4ம் 8ன்னு கணக்கு சொன்னால் அவர் 3 என்று கணக்கு போடுவார். இதுதான் குமாரசாமி கணக்கு என்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை.

 

 வாட்ஸ் அப்பில் சொல்றாங்கோ...  விஜயகாந்த் இந்த கூட்டணிக்கு போவார் என்று பத்திரிகைகள் எல்லாம் சொல்றாங்க. பிரேமலதா ஏற்கனவே சொன்னாங்க. திரும்பவும் நான் கேட்கிறேன். நான் கிங் மேக்கரா இருக்கணுமா. கிங்கா இருக்கணுமா. நான் கிங் ஆக இருந்தால் நீங்களும் கிங் தான். இன்னும் 2 மாதம் தான் இருக்கிறது. ஜெயலலிதா எந்த திட்டத்தையும் செய்ய மாட்டார். 5 ஆண்டுகளில் நான் அனைத்து திட்டத்தையும் செயல்படுத்துவேன். தேமுதிக தொண்டர்கள் சண்டை, சச்சரவு இல்லாமல் வீடு திரும்ப வேண்டும். பத்திரமாக வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.